CWC 2023 : பால் டேம்பரிங்கை மிஞ்சி.. நைசாக பாக் வீரர்கள் செய்த காரியம்.. ஐசிசி’க்கு ரசிகர்கள் கோரிக்கை

Pak fielding
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற 2வது லீக் போட்டியில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் தங்களுடைய பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சற்று தடுமாற்றமாக விளையாடி 49 ஓவர்களில் 286 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக சவுத் ஷாக்கில் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் தலா 68 ரன்கள் எடுக்க நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 287 ரன்களை துரத்திய நெதர்லாந்து சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 41 ஓவரில் 205 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பஸ் டீ லீடி 67, விக்ரம்ஜித் சிங் 52 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

பவுண்டரி டேம்பரிங்:
அதன் காரணமாக 2023 ஆசிய கோப்பையில் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் ஒரு வழியாக வெற்றி பாதைக்கு திரும்பியது. குறிப்பாக இதே ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை பயிற்சி போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து விமர்சனத்திற்குள்ளான அந்த அணி தற்போது அதே மைதானத்தில் வெற்றியை பதிவு செய்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் 287 ரன்களை துரத்திய நெதர்லாந்து 106/2 என்ற நல்ல துவக்கத்தை பெற்று வெற்றிக்கு போராடிய போது 22வது ஓவரில் பவுண்டரி எல்லையருகே ஒரு பாகிஸ்தான் ஃபீல்டர் வழக்கம் போல பந்தை தடுப்பதற்காக நின்று கொண்டிருந்தார். ஆனால் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பவுண்டரி எல்லையை 2 – 3 அடிகள் வரை பின்னோக்கி அவர் கால்களால் தள்ளி எதார்த்தமாக நின்று கொண்டிருந்ததை இந்திய ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்தனர்.

- Advertisement -

அதை உடனடியாக ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இந்திய ரசிகர்கள் வேண்டுமென்றே பாகிஸ்தான் வீரர்கள் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துவதற்காக பவுண்டரி எல்லையை பெரிதாக்கியதாக விமர்சித்து வருகிறார்கள். அதனால் இதைப் போட்டியை நடத்தும் ஐசிசி நடுவர்கள் விசாரிக்க வேண்டும் என்றும் சில இந்திய ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

அத்துடன் இதற்கு முன் பந்தை சேதப்படுத்தியதை பார்த்திருக்கிறோம். ஆனால் பவுண்டரியை நைசாக சேதப்படுத்துவதை இப்போது தான் பார்க்கிறோம் என்றும் ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். முன்னதாக இந்தியாவில் இருக்கும் மைதானங்களில் பவுண்டரி அளவு மிகவும் சிறியதாக இருப்பதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆரம்பத்திலேயே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement