ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் தொடரை முடித்த பின் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அந்த தொடரில் களமிறங்கப் போகும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது.
முதல் 2 போட்டிகளில் விளையாடப் போகும் அந்த அணியில் இசான் கிசான் கழற்றி விடப்பட்டு இளம் வீரர் துருவ் ஜுரேல் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற படி ரகானே, புஜாரா போன்ற மூத்த வீரர்கள் கழற்றி விடப்பட்டு ஜெய்ஸ்வால், கில் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல முகமது ஷமி காயத்தால் விலகியுள்ள நிலையில் பும்ரா துணை கேப்டனாகவும் முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆவேஷ் கான் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வன்மம் எதற்கு:
இந்நிலையில் அந்த அணி விவரத்தை புகைப்படமாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் நிர்வாகம் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஆனால் அந்த போஸ்டரில் கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 பேரின் புகைப்படத்தை மட்டுமே இணைத்துள்ள மும்பை நிர்வாகம் ரோகித் சர்மாவை சேர்க்காதது தற்போது ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவின் புகைப்படத்தை போஸ்டரில் சேர்க்காமல் வேண்டுமென்றே மும்பை நிர்வாகம் நீக்கியுள்ளதாக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த நன்றி மறந்த மும்பை நிர்வாகம் சமீபத்தில் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை தங்களுடைய புதிய கேப்டனாக அறிவித்தது.
அதற்கு ஒரே நாள் இரவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்த அணியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்வதை நிறுத்தினார்கள். அந்த நிலையில் உங்களுடைய அணியில் தான் இடம் கொடுக்கவில்லை ஆனால் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருப்பது கூட உங்களுக்கு பிடிக்கவில்லையா? அப்படி போஸ்டரில் நீக்கும் அளவுக்கு என்ன வன்மம்? என்று ரசிகர்கள் தற்போது மும்பையை விளாசி வருகின்றனர்.
இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்படாதது ஏன்? – உண்மை காரணம் இதோ
மறுபுறம் 2023 உலகக் கோப்பையில் சந்தித்த காயத்தால் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. அதனால் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையிலும் இந்தியாவின் கேப்டனாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.