உங்களுக்கு இவ்ளோ திமிர் ஆகாது, வெளியேறிய வங்கதேச கேப்டன் – அவமானப்படுத்திய ஹர்மன்ப்ரீத் மீது இந்திய ரசிகர்களே கோபம்

- Advertisement -

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக ஜூலை 22ஆம் தேதி டாக்காவில் நடைபெற்ற 3வது போட்டி பரபரப்புக்கு மத்தியில் சமனில் முடிந்தது. குறிப்பாக அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் ஃபர்கானா ஹோய்க் சதமடித்து 107 ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவர்களில் 255/4 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ராணா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை துரத்திய இந்தியாவுக்கு நட்சத்திர வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா வழக்கம் போல 59 ரன்களும் மிடில் ஆர்டரில் ஹர்லின் தியோல் 77 ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தனர். ஆனால் அப்போது வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் வெற்றிக்கு போராடிய போது எல்பிடபுள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். குறிப்பாக பந்து தம்முடைய காலில் படாமல் பேட்டில் பட்டதாக கருதிய அவர் வங்கதேசத்தை சேர்ந்த நடுவர் அந்த அணிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியதால் கோபத்துடன் ஸ்டம்பை அடித்து நொறுக்கி திட்டிக்கொண்டே பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

ஓவர் திமிர்:
அதை தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிகஸ் பொறுப்பின்றி சிங்கிளாகவே எடுத்து 33* ரன்கள் எடுத்த நிலையில் எதிர்ப்புறம் வந்த வீராங்கனைகள் வழக்கமான சொதப்பலை வெளிப்படுத்தியதால் 191/4 என்ற நிலையிலிருந்த இந்தியா 49.3 ஓவரில் அவுட்டாகி கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டது இந்திய ரசிகர்களையே கடுப்பாக வைத்தது. அதை விட அடுத்த முறை வங்கதேசத்திற்கு வரும் போது வங்கதேசத்திற்கு சாதகமாக நடந்து கொள்ளும் நடுவர்களுக்கு எதிராகவும் நாங்கள் விளையாட கற்றுக்கொள்ள வேண்டும் என ஹர்மன்ப்ரீத் போட்டியின் முடிவில் வெளிப்படையாகவே விமர்சித்தார்.

பொதுவாக களத்தில் நடுவர் தவறான தீர்ப்பையே வழங்கினாலும் அதை ஏற்றுக்கொண்டு அமைதியுடன் செல்ல வேண்டியதே வீரர்களின் கடமை என்பது காலம் காலமாக இருந்து வரும் விதிமுறையாகும். அதே போல போட்டியில் கொடுக்கப்படும் தீர்ப்புகள் பற்றி நடுவர்களுக்கு எதிராக பொது வெளியில் பேசுவதும் கிரிக்கெட்டின் விதிமுறைகளுக்கு எதிரானதாகும். அப்படிப்பட்ட நிலையில் களத்தில் ஸ்டம்ப்பை நொறுக்கி நடுவரை திட்டிக்கொண்டே சென்ற ஹர்மன்பிரீத் போட்டியின் முடிவில் ஓப்பனாக நடுவர்களை விமர்சித்தது இந்திய ரசிகர்களையே அதிருப்தியில் ஆழ்த்தியது.

- Advertisement -

அத்துடன் நிற்காத அவர் 1 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடர் சமனில் முடிந்ததால் இறுதியில் இரு அணிக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்ட கோப்பையை பெற்ற போது “சென்று அம்பயர்களையும் அழைத்து வாருங்கள். அவர்கள் இல்லாமல் உங்களால் எதையும் செய்ய முடியாது. நீங்கள் மட்டும் ஏன் இங்கே இருக்கிறீர்கள். இந்த போட்டியை நீங்கள் சமன் செய்வதற்கு நடுவர்கள் உதவினார்கள். அதனால் அவர்களையும் இங்கே அழைத்து வாருங்கள் போட்டோ எடுத்துக் கொள்வோம்” என்று அருகில் நின்ற வங்கதேச கேப்டனிடம் வெளிப்படையாகவே அவமானப்படுத்தும் வகையில் பேசினார்.

அதனால் ஏமாற்றமடைந்த வங்கதேச கேப்டன் சுல்தானா எதுவுமே பேசாமல் கோப்பையை ஹர்மன்ப்ரீத் கைகளிலே விட்டுவிட்டு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலிருந்து வெளியேறி தன்னுடைய அணி வீராங்கனைகளுடன் பெவிலியன் திரும்பி விட்டார். இப்படி ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் ஹர்மன்ப்ரீத் அடுத்தடுத்து பொறுமையை காட்டாமல் அதிரடியாக நடந்து கொண்டது இந்திய ரசிகர்களையே கோபமடைய வைக்கிறது. ஏனெனில் வரலாற்றில் தவறான தீர்ப்பு வழங்கியதால் குறைந்தது 10 சதங்களை தவறவிட்ட சச்சின் அனைத்து நேரங்களிலும் நடுவர்களுக்கு எதிராக பேசாமல் ஃபெவிலியன் திரும்பிய பெருமைக்குரியவர்.

இதையும் படிங்க:இந்திய அணியில் விராட் கோலி போன்ற ஒரு சிலரை தவிர்த்து யாருமே ஃபிட்டா இல்ல – ரோஹித்தை மறைமுகமாக தாக்கிய முன்னாள் பாக் வீரர்

அதே போல ஸ்டீவ் பக்னர் போன்ற நடுவர் வேண்டுமென்றே இந்தியாவுக்கு எதிராக தீர்ப்புகளை வழங்கி வெற்றியை காலி செய்த போதெல்லாம் கங்குலி முதல் டிராவிட் பல இந்தியாவின் மகத்தான கேப்டன்கள் அமைதியாகவே இருந்துள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் உங்களுக்கு மட்டும் இவ்வளவு திமிர் ஆகாது என்று அவரை இந்திய ரசிகர்களே விமர்சிக்கின்றனர். அதை விட இப்படி அடுத்தடுத்து 3 விதிமுறை மீறல்கள் செய்ததால் விரைவில் அவருக்கு ஐசிசி தண்டனை வழங்க உள்ளதாக க்ரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement