IND vs WI : இப்படி ஒரு ரன் மெஷின் பவுலரை பார்த்ததே இல்ல – மோசமான சாதனை படைத்த இந்திய பவுலரை கலாய்க்கும் ரசிகர்கள்

Avesh Khan IND vs WI
- Advertisement -

ஆகஸ்ட் 2-ஆம் தேதியான நேற்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. வார்னர் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164/5 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 20 (20) ரன்களிலும் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 22 (23) ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தாலும் மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 73 (50) ரன்கள் குவித்தார்.

இறுதியில் ரோவ்மன் போவல் 23 (14) ரன்களும் சிம்ரோன் ஹெட்மயர் 20 (12) ரன்களும் எடுத்து ஓரளவு பினிசிங் கொடுத்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 165 ரன்களை துரத்திய இந்தியாவிற்கு 11* (5) ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி சென்றார். அந்த நிலைமையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினார்.

- Advertisement -

இந்தியா வெற்றி:
அதில் கடைசிவரை பொறுமையாகவே பேட்டிங் செய்த ஷ்ரேயஸ் ஐயர் 24 (27) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் 8 பவுண்டரி 4 சிக்சர்களை 76 (44) ரன்களை 172.73 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட சூர்யகுமார் யாதவ் வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். இறுதியில் ரிஷப் பண்ட் 33* (26) ரன்களும் தீபக் ஹூடா 10* (7) ரன்களும் எடுத்ததால் 19 ஓவரில் 165/3 ரன்கள் எடுத்த இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இத்தொடரில் மீண்டும் இந்தியா 2 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

இந்த வெற்றிக்கு 76 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதுபோக பந்துவீச்சில் கெய்ல் மேயர்ஸ் தவிர ஏனைய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை 30 ரன்களை கூட தாண்ட விடாமல் அற்புதமாக பந்துவீசிய இந்திய பவுலர்களும் வெற்றிக்கு பங்காற்றினர். ஆனால் “குரூப்பில் டூப்பு” என்பது போல் சிறப்பாக செயல்பட்ட இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மத்தியில் ஆவேஷ் கான் மட்டும் வள்ளலாக ரன்களை வாரி வழங்கினார்.

- Advertisement -

ரன் மெஷின்:
ஏனெனில் அர்ஷிதீப் சிங் உட்பட எஞ்சிய அனைத்து இந்திய பவுலர்களும் 9க்கும் குறைவான எக்கனாமியில் முடிந்தளவு சிறப்பாக பந்து வீசிய நிலையில் இவர் மட்டும் சுமாராக கூட பந்து வீசாமல் வெறும் 3 ஓவர்களில் 1 விக்கெட் கூட எடுக்காமல் 47 ரன்களை 15.66 என்ற மோசமான எக்கனாமியில் பந்துவீசினார். குறிப்பாக முதல் 2 ஓவர்களில் 30 ரன்களை வாரி வழங்கிய இவரை நம்பியை கேப்டன் ரோகித் சர்மா முக்கியமான 19-வது ஓவரை வழங்கினார். ஆனாலும் அதில் 17 ரன்களை வாரி வழங்கிய அவர் முழுமையாக 4 ஓவர்கள் வீசியிருந்தால் 50 ரன்களை தொட்டிருப்பார் என்பது அவரின் மோசமான பந்து வீச்சை காட்டுகிறது.

இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 3 ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்த இந்திய பவுலர் என்ற மோசமான சாதனை படைத்த அவர் ஒரு போட்டியில் அதிக எக்கனாமியில் (15.66) பந்து வீசிய இந்திய பவுலர் என்ற படுமோசமான சாதனையும் படைத்தார். ஏற்கனவே இந்த தொடரின் 2-வது போட்டியிலும் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது புவனேஸ்வர் குமாரை விட்டுவிட்டு இவர் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பு கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் 2 நோபால், 6, 4 என போராடாமல் மோசமாக பந்துவீசிய அவர் முதல் 2 பந்துகளிலேயே வெற்றியை எதிரணிக்கு தாரை வார்த்தார். ஐபிஎல் 2022 தொடரில் லக்னோ அணியில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டதால் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் தேர்வாகி முழுமையான வாய்ப்பு பெற்ற அவர் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்து தவிர எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் ரன்களை வாரி வழங்கினார்.

கலாய்க்கும் ரசிகர்கள்:
மேலும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பிரசித் கிருஷ்ணா தடுமாறினார் என்பதற்காக 2-வது ஒருநாள் போட்டியில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற இவர் வெறும் 6 ஓவரில் 54 ரன்களை வாரி வழங்கியதால் அடுத்த போட்டியிலேயே பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: IND vs WI : இன்னுமா அவர நம்பிகிட்டு இருக்கீங்க, டி20 சரிப்பட்டு வராத முக்கிய வீரரை நீக்ககோரும் ரசிகர்கள்

தற்போது டி20 தொடரிலும் சொதப்பும் இவரைப் பார்க்கும் ரசிகர்கள் பொதுவாக பேட்ஸ்மேன்கள் தான் ரன் மெஷின்களாக ரன்களைக் குவிப்பார்கள் ஆனால் முன்னாள் இந்திய வீரர் அசோக் திண்டாவை போல் பந்துவீச்சில் ரன் மெஷினாக செயல்படும் பவுலரை நீண்ட நாட்கள் கழித்து இப்போதுதான் பார்க்கிறோம் என்று கலகலப்புடன் கூறுகிறார்கள்.

Advertisement