IND vs WI : இந்திய பவுலரை கண்டாலே தெறித்து ஓடும் வெ.இ அதிரடி வீரரை – கலாய்க்கும் ரசிகர்கள், முழுவிவரம்

Ravi Bishnoi
- Advertisement -

அமெரிக்காவின் ப்ளோரிடாவில் ஆகஸ்ட் 7-ஆம் தேதியான நேற்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்தியா களமிறங்கியது. ஏற்கனவே 3 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்ட காரணத்தால் இந்த சம்பிரதாய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா இந்தியாவை வழி நடத்தினார். இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 188/7 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு நீண்ட நாட்களுக்குப்பின் வாய்ப்பு பெற்ற இஷான் கிசான் 11 (13) அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடவை கொடுத்தார்.

இருப்பினும் 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் – தீபக் ஹூடா ஆகியோர் அதிரடியாக ரன்களை சேர்த்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை மீட்டெடுத்தார்கள். அதில் தீபக் ஹூடா 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38 (25) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த ஓவரியிலேயே 8 பவுண்டரி 2 சிக்சர்களை பறக்கவிட்ட ஸ்ரேயாஸ் அய்யர் 64 (40) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த சஞ்சு சாம்சன் 15 (11) ரன்களிலும் தினேஷ் கார்த்திக் 12 (9) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றினர். இருப்பினும் கடைசி நேரத்தில் 2 பவுண்டரி 2 சிக்ஸரை பறக்கவிட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா 28 (16) ரன்கள் விளாசி நல்ல பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

அசத்தல் வெற்றி:
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஓடீன் ஸ்மித் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 189 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய அந்த அணிக்கு எதிர்பாராத வகையில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் டக் அவுட்டாகி ஏமாற்ற அவருடன் களமிறங்கிய சமர் ப்ரூக்ஸ் 13 (13) ரன்களில் நடையை பெற்றனர். போதாகுறைக்கு அடுத்து வந்த டேவோன் தாமஸ் 10 (11) கேப்டன் நிக்கோலஸ் பூரன் 3 (6) ரோவ்மன் போவல் 9 (13) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினார்.

அதனால் பாதி சரிந்த அந்த அணியின் வெற்றிக்காக மிடில் ஆரிடரில் போராடிய சிம்ரோன் ஹெட்மையர் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 56 (35) ரன்களில் ஆட்டமிழக்க எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர். அதனால் 15.4 ஓவரில் வெஸ்ட் இண்டீசை 100 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 88 ரன்கள் வித்யாசத்தில் மெகா வெற்றி பெற்று 4 – 1 (5) என்ற கணக்கில் இத்தொடரை வென்று வெற்றிக் கோப்பையுடன் இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளது.

- Advertisement -

மிரட்டிய பிஷ்னோய்:
இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய அக்சர் பட்டேல் ஆட்ட நாயகனாகவும் தொடர் முழுவதும் அசத்திய அர்ஷிதீப் சிங் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர். இருப்பினும் இந்த போட்டியில் 4 ஓவரில் 3 விக்கெட்டுகளை எடுத்த குல்தீப் யாதவ் 3 ஓவரில் 3 விக்கெட்களை எடுத்த அக்சர் படேல் ஆகியோரை விட வெறும் 2.4 ஓவரில் வெறும் 16 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்த இளம் சுழல்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக வெஸ்ட் இண்டீசை மிரட்டினார்.

குறிப்பாக 56 (35) ரன்களை எடுத்து இந்தியாவுக்கு மிரட்டலை கொடுத்த சிம்ரோன் ஹெட்மையரை காலி செய்த அவர் இளம் அதிரடி வீரர் ரோவ்மன் போவலை 9 (13) ரன்களில் அவுட் செய்து போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார். கடைசியில் கீமோ பால், ஓபேத் மெக்காய் ஆகியோரையும் அடுத்தடுத்து டக் அவுட் செய்த அவர் முன் கூட்டியே போட்டியை முடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

தெறித்து ஓடும் போவல்:
அதிலும் வளர்ந்து வரும் இளம் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரராகக் கருதப்படும் ரோவ்மன் போவல் இவரைக் கண்டாலே பெட்டிப்பாம்பாக அடங்கி விடுகிறார். ஆம் ரவி பிஷ்னோயை சர்வதேச கிரிக்கெட்டில் 4 போட்டிகளில் எதிர்கொண்ட ரோவ்மன் போவல் அதில் 3 போட்டிகளில் அவரிடம் அவுட்டாகியுள்ளார். அதுபோக ஐபிஎல் உட்பட ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அவரை 8 இன்னிங்சில் எதிர்கொண்ட ரோவ்மன் போவல் வெறும் 24 ரன்களை 82.35 என்ற குறைவான ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே எடுத்துள்ளார். 4 முறை ஆட்டமிழந்துள்ளார்.

இதை பார்க்கும் ரசிகர்கள் ரவி பிஷ்னோயின் திறமையை மனதார பாராட்டுவதுடன் அவரை கண்டாலே ரோவ்மன் போவல் தெறித்து ஓடுகிறார் என்றும் வருங்காலத்தில் இந்த ஜோடி மீண்டும் மோதுவதை பார்க்க இப்போதே ஆவலுடன் காத்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கலகலப்புடன் தெரிவிக்கின்றனர்.

Advertisement