மழை வருது பேசாம டி20 உ.கோ’யை துபாய்க்கு மாத்துங்க – படுமோசமான சாதனையால் பாகிஸ்தானை கலாய்க்கும் ரசிகர்கள்

Pakistan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் வெற்றிகரமான வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது போல் ஆரம்பம் முதலே எதிர்பாராத திரில்லர் திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அதன் உச்சகட்டமாக அக்டோபர் 27ஆம் தேதியன்று நடைபெற்ற 24வது லீக் போட்டியில் வலுவான பாகிஸ்தானை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த ஜிம்பாப்வே வரலாற்றில் மறக்க முடியாத த்ரில் வெற்றி பெற்றது. பெர்த் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் 20 ஓவர்களில் 130/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சிக்கந்தர் ராசா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 31 (28) ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 131 என்ற சுலபமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் அசாம் 4 (9) முஹம்மது ரிஸ்வான் 14 (16) என முதுகெலும்பு பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். போதாக்குறைக்கு ஏற்கனவே திண்டாடும் மிடில் ஆர்டரில் ஷான் மசூட் 44 (38) ரன்கள் எடுத்தது தவிர இப்திகார் அகமது 5, சடாப் கான் 17, ஹைதர் அலி 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

துபாய்க்கு மாத்துங்க:
அதனால் ஏற்பட்ட பரபரப்பில் ப்ராட் எவன்ஸ் வீசிய கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது சொதப்பிய பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 9 ரன்கள் மட்டுமே எடுத்து மற்றுமொரு அவமான தோல்வியை சந்தித்தது. ஏனெனில் ஏற்கனவே முதல் போட்டியில் பரமா எதிரியான இந்தியாவிடம் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்ட அந்த அணி இதுவரை களமிறங்கிய 2 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்துள்ளது. இதனால் எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாலும் கூட நாக் அவுட் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு அந்த கிரிக்கெட் அணிக்கு மிகவும் குறைவாக மாறியுள்ளது.

சொல்லப்போனால் இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் கதை கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றே கூறலாம். ஏனெனில் இந்தத் தொடர் நடைபெறும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்த உலகக் கோப்பையையும் சேர்த்து வரலாற்றில் இதுவரை 6 டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ள பாகிஸ்தான் 5 தோல்விகளை சந்தித்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆனால் 1 வெற்றிகளை கூட பதிவு செய்யவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது. பொதுவாகவே தரமான வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்ட பாகிஸ்தான் அணி வேகம், பவுன்ஸ் ஆகியவற்றிற்கு கை கொடுக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு பொருந்தக் கூடியதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆனாலும் அங்கு இந்த உலகக்கோப்பை மட்டுமல்லாது வரலாற்றில் அனைத்து போட்டிகளிலும் திணறி வரும் பாகிஸ்தான் ராசியில்லாத ஆஸ்திரேலிய மண்ணில் இனி வரும் போட்டிகளில் அபரீத செயல்பாடுகளை வெளிப்படுத்தி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினமாகவே பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஜிம்பாப்வே அணி கூட ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றில் இதுவரை 3 வெற்றிகளை பதிவு செய்து அசத்தியுள்ளது.

மேலும் நெதர்லாந்து (2), வங்கதேசம் (1), நமீபியா (1), ஸ்காட்லாந்து (1) ஆகிய அணிகள் கூட ஆஸ்திரேலியா மண்ணில் டி20 கிரிக்கெட்டில் குறைந்தது 1 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அப்படி கத்துக்குட்டிகள் கூட வெற்றியை பதிவு செய்துள்ளதை பார்க்கும் ரசிகர்கள் இந்த உலகக் கோப்பையில் மழையும் அடிக்கடி வந்து தொந்தரவு செய்வதால் பேசாமல் இந்த தொடரை பாகிஸ்தானுக்கு ராசியான துபாய்க்கு மாற்றுமாறு சமூக வலைதளங்களில் மீண்டும் அந்த அணியை கலாய்த்து தள்ளுகிறார்கள்.

Advertisement