IND vs SL : எத்தனை பேர் வந்தாலும் தோனியாக முடியாது – ரிஷப் பண்ட் செயலால் ரசிகர்கள் சோகம், என்ன நடந்தது

MS Dhoni Rishabh Pant
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் அனல் பறக்க நடந்து வரும் 2022 ஆசிய கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும் முக்கியமான சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் மண்ணைக் கவ்வியது. அதனால் செப்டம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2வது சூப்பர் 4 போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற வாழ்வா – சாவா நிலையில் களமிறங்கிய இந்தியா மீண்டும் வழக்கம் போல முக்கிய நேரங்களில் சொதப்பி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தட்டுத்தடுமாறி 173/8 ரன்கள் சேர்த்தது.

கேஎல் ராகுல் 6, விராட் கோலி 0, ரிஷப் பண்ட் 17, ஹர்திக் பாண்டியா 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்ட இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 5 பவுண்டரி 4 சிக்சருடன் 72 (41) ரன்களை 175.61 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து ஆட்டமிழந்தார். அதை துரத்திய இலங்கைக்கு ஆரம்பத்திலேயே இந்திய பவுலர்களை பந்தாடிய தொடக்க வீரர்கள் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தனர். அதில் நிசாங்கா 4 பவுண்டரி 2 சிக்சருடன் 52 (37) ரன்களும் குசால் மெண்டிஸ் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (37) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
அதன்பின் அஸலாங்கா 0, குணதிலகா 1 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் கடைசி நேரத்தில் களமிறங்கி அழுத்தத்தை அற்புதமாக சமாளித்த பணுகா ராஜபக்சா 25* (17) ரன்களும் கேப்டன் தசுன் ஷனாகா 33* (18) ரன்களும் குவித்து செய்து வெற்றி பெற வைத்தனர். முன்னதாக ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் சூப்பர் 4 போட்டியில் வென்றிருந்த இலங்கை இந்த வெற்றியால் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது.

மறுபுறம் வாழ்வா சாவா என்ற அழுத்தமான போட்டியில் மீண்டும் முக்கிய வீரர்கள் சொதப்பியதால் மண்ணை கவ்விய இந்தியாவின் பைனல் கனவு 99% தகர்ந்துள்ளது. சுமாரான கேப்டன்ஷிப், தவறான அணி தேர்வு என நிறைய குளறுபடிகளால் இந்த அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ள இந்தியா கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பையும் கிட்டத்தட்ட இழந்துள்ளது இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

மிஸ் யூ தோனி:
முன்னதாக கடைசி ஓவர் வரை அனல் பறந்த இந்த போட்டியில் கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட போது 14 ரன்களை வாரி வழங்கிய புவனேஸ்வர் குமார் மீண்டும் வெற்றியை தாரை வார்த்தார். ஏனெனில் கடைசி ஓவரில் வெறும் 7 ரன்களை மட்டும் கட்டுப்படுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் பந்துவீசிய அர்ஷிதீப் சிங் 1, 1, 2, 1 என போராடி முதல் 4 பந்துகளில் 5 ரன்களை கொடுத்தார். ஆனால் 5வது பந்தை எதிர்கொண்ட சனாக்கா அதை அடிக்காமல் தவறவிட்டு அவசர அவசரமாக ரன்கள் எடுக்க ஓடினார்.

அப்போது அந்த பந்தை கச்சிதமாக பிடித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஓடிவந்து அடிக்காமல் நின்ற இடத்திலிருந்தே ஸ்டம்பை நோக்கி எரிந்த குறி தப்பியதால் 2 ரன்கள் எடுத்த இலங்கை சிறப்பான வெற்றி பெற்றது. ஒருவேளை ரிஷப் பண்ட் மட்டும் அந்தப் பந்தை சரியாக அடித்திருந்தால் அது ரன் அவுட்டாக மாறி இந்தியா வெல்வதற்கோ அல்லது சூப்பர் ஓவர் வந்து மேற்கொண்டு வெற்றிக்கு போராடுவதற்கோ வாய்ப்பு கிடைத்திருக்கும்.

- Advertisement -

ஆனால் பேட்டிங்கிலும் சொதப்பி விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பிய அவரது செயல்பாட்டை பார்த்த முன்னாள் வீரர் ஹேமங் பதானி மற்றும் ரசிகர்கள் முன்னாள் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனியை ரொம்பவும் மிஸ் செய்வதாக சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவே ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஏனெனில் விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றிய தோனி கடந்த 2016இல் பெங்களூருவில் நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட போது பேட்ஸ்மேன் அதைத்தவிர விடுவார் என்பதை முன்கூட்டியே கணித்து பந்தை எறிந்தால் தவற விட்டு விடுவோம் என்று உணர்ந்து கடைசி வரை ஓடி சென்று ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்து 1 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2022 : இனியும் இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கா? பைனலுக்கு செல்வதற்கான வழிகள் இதோ

அந்த தருணத்தை நினைத்து உருகும் ரசிகர்கள் வரலாற்றில் ரிஷப் பண்ட் போல எத்தனை கீப்பர்கள் வந்தாலும் தோனியாக யாராலுமே வர முடியாது என்று உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement