அவரா இது ! ரசிகர்களின் வாயடைத்து பாராட்ட வைத்த ஆஸி வீரர் – திறமை இருக்கும் போல

Daniel Sams
- Advertisement -

எதிர்பாரா திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மே 6-ஆம் தேதி நடைபெற்ற 51-வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் மும்பை முதலிடத்தில் இருக்கும் வலுவான குஜராத்தை எதிர்கொண்டது. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா – இஷான் கிசான் இந்த முறை அதிரடியாக பேட்டிங் செய்து 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்தனர். இதில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் ரோகித் சர்மா அதிரடியாக 43 (28) ரன்கள் எடுத்து அவுட்டாக அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 13 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

Rohit Sharma Ishan Kishan

- Advertisement -

அடுத்த ஒருசில ஓவர்களில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 45 (29) ரன்கள் எடுத்த இஷாந்த் கிசான் ஆட்டமிழந்த நிலையில் களமிறங்கிய கைரன் பொல்லார்ட் 4 (14) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதனால் நல்ல தொடக்கத்தை பெற்ற அணி திடீரென 119/4 என்று சரிந்தது.

குஜராத் சூப்பர் தொடக்கம்:
அந்த சரிவை ஈடுகட்ட இளம் வீரர் திலக் வர்மா அதிரடியாக 21 (16) ரன்கள் எடுத்து ரன் அவுட்டான நிலையில் கடைசி நேரத்தில் டிம் டேவிட் அதிரடியாக 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 44* (21) ரன்கள் எடுத்து சூப்பரான பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் மும்பை 177/6 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து 178 என்ற நல்ல இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர்கள் ரித்திமான் சஃகா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினர்.

Shubman Gill Wriddhiam Saha

10 ஓவர்கள் வரை மும்பை பவுலர்களை வெளுத்து வாங்கி 106 ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே கிட்டதட்ட வெற்றியை உறுதிசெய்த இந்த ஜோடிய 12-வது ஓவரில் தமிழக வீரர் முருகன் அஸ்வின் பிரித்தார். இதில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் சுப்மன் கில் 52 (36) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அதே ஓவரில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 55 (40) ரன்கள் எடுத்து சஹாவும் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 14 (11) ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக 24 (14) ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானதால் போட்டியில் திடீர் திருப்புமுனை ஏற்பட்டது.

- Advertisement -

மிரட்டிய சாம்ஸ்:
குறிப்பாக வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டதாலும் களத்தில் இதற்கு முன் கிடைக்காத வெற்றியை கூட பெற்றுக்கொடுத்த டேவிட் மில்லர் மற்றும் ராகுல் திவாடியா ஆகியோர் இருந்ததாலும் குஜராத் வெற்றி என அனைவரும் நினைத்தனர். அந்த நிலைமையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய டேனியல் சாம்ஸ் 1, 0 என முதல் 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே கொடுத்ததால் குஜராத்துக்கு ப்ரசர் ஏற்பட்டது. அதை தொடர்ந்து 3-வது பந்தில் 2 ரன்கள் எடுக்க முயன்ற ராகுல் தீவாடியா ரன் அவுட்டானார். அந்த பரபரப்பான வேளையில் கடைசி 3 பந்துகளிலும் அபாரமாக பந்து வீசிய சாம்ஸ் 1, 0, 0 என மேலும் 1 ரன் மட்டுமே கொடுத்து வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பைக்கு எதிர்பாராத திரில் வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

இதனால் போராடி தோற்ற குஜராத் பங்கேற்ற 11 போட்டிகளில் 3-வது தோல்வியை பதிவு செய்தாலும் தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மறுபுறம் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோன நிலையில் 10 போட்டியில் 2-வது வெற்றியை பதிவு செய்த மும்பை தனக்குத் தானே ஆறுதலடைந்தது. இதற்கு முந்தைய போட்டிகளில் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போதெல்லாம் அதை அதிரடியாக மில்லர் – திவாடியா – ரசித் கான் ஆகியோர் எடுத்து எதிர்பாராத வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

ரசிகர்கள் வியப்பு:
மறுபுறம் இந்த வருடம் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட போது அதை பட் கமின்ஸ்க்கு எதிராக 16-வது வீசிய டேனியல் சாம்ஸ் 6, 4, 6, 4, 2 (நோ பால்), 6, 4 என ஒரே ஓவரில் 35 ரன்களையும் வாரி வழங்கி கையிலிருந்த நல்ல வெற்றியைப் பரிசளித்தார். அப்படிப்பட்ட அவர் கடைசி ஓவரில் வெறும் 9 ரன்களை நிச்சயமாக கொடுத்து விடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அற்புதமாக பந்து வீசிய டானியல் சாம்ஸ் தோல்வியில் கற்ற பாடத்தை பயன்படுத்தி திரில்லான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

அவரின் அபார பந்துவீச்சால் சேசிங் செய்வதில் மாஸ் காட்டி வந்த குஜராத் இந்த வருடம் முதல் முறையாக சேசிங் செய்யும்போது தோற்றது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய டேனியல்ஸ் சாம்சை வியந்து பார்க்கும் ரசிகர்கள் “அவரா இது” என்று அன்றைய நாளில் அவரை கலாய்த்ததற்காக சமூக வலைதளங்களில் மன்னிப்பு கேட்கும் வகையில் பாராட்டுவதுன் “இவரிடமும் திறமை இருக்கும் போல” என்று பேசி வருகின்றனர்.

Advertisement