ஆசிய கோப்பை 2022 : கம்பேக்கில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை படைக்க வரும் விராட் கோலி – புள்ளிவிவரம் இதோ

Babar-Azam-and-Virat-Kohli
- Advertisement -

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 2022 தொடர் வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசியாவின் டாப் 6 அணிகள் பலப்பரீட்சை நடத்தும் இந்த தொடருக்கான முழு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் இதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா இந்தியாவை வழிநடத்தும் அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர்களுடன் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்திய சூரியகுமர் யாதவ், புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர்களும் தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், அரஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இருப்பினும் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்தால் விலகியது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன், இஷான் கிசான் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

- Advertisement -

திரும்பிய விராட்:
அவை அனைத்தையும் விட இந்த தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் கடந்த 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்து வரும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் அவர் இத்தொடரில் ஃபார்முக்கு திரும்பி கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ரன் மெஷினாக 23000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களை விளாசி ஏராளமான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து ஏற்கனவே தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ள அவர் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்தார்.

அதன்பின் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்த அவர் பார்மை இழப்பதற்கு காரணமாக இருந்த கேப்டன்ஷிப் பொறுப்புகளை ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாட துவங்கியதால் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது உட்பட முன்பை விட சுமாராக செயல்பட்டதால் பொறுமையிழந்த கபில் தேவ் உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் அவரை அணியில் இருந்து நீக்குமாறு வெளிப்படையாக விமர்சித்தனர். அதுபோக தொடர்ச்சியாக விளையாடிய களைப்பு ஆட்டத்தில் தெரிவதால் சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

- Advertisement -

கம்பேக்கில் சாதனை:
ஆனால் தொடர்ச்சியாக விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்த அவர் சொன்னது போல் தொடர்ச்சியாகவும் விளையாடாமல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் மட்டும் பங்கேற்று விட்டு வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடர்களில் ஓய்வெடுத்து வருகிறார். இதுவே பணத்துக்காக விளையாடும் ஐபிஎல் தொடரில் இப்படி ஓய்வெடுப்பாரா என்று அதற்காக தனியாக விமர்சனத்தை சந்தித்தார். இருப்பினும் விராட் கோலியை விமர்சிக்கும் நபர்களால் 70 சதங்களை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது என்ற கருத்துடன் கெவின் பீட்டர்சன், ரிக்கி பாண்டிங், பிரைன் லாரா உட்பட ஏராளமான வெளிநாட்டு ஜாம்பவான்கள் அவருக்கு விமர்சனத்தை மிஞ்சிய ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

மேலும் பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் பணிச்சுமையால் திடீரென்று ஓய்வு பெறும் இந்த நவீன கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடும் அவருக்கும் ஓய்வு தேவை என்ற வகையில் ஆதரவும் பெருகி வருகிறது. அப்படி ரசிகர்களின் அன்பு மற்றும் முன்னாள் வீரர்களின் ஆதரவை பெற்றுள்ள விராட் கோலி 2022 ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுப்பதே தமது லட்சியம் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். அப்படிப்பட்ட நிலைமையில் நல்ல ஓய்வெடுத்து புத்துணர்ச்சியை பெற்றுள்ள அவர் இந்த ஆசிய கோப்பையில் பார்முக்கு திரும்பி அசத்தலாக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

மேலும் ஆரம்ப காலங்களில் அபாரமாக செயல்பட்டுள்ள அவர் இப்போதெல்லாம் விளையாடினாலே சாதனை என்ற வகையில் இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் களமிறங்கும் போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடும் 2-வது இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனை படைக்க உள்ளார்.

இதுவரை கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி வரும் நிலையில் அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானுக்கு எதிரான கம்பேக் போட்டியில் இந்த சாதனையை விராட் கோலி படைக்க உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அந்த பட்டியல்:

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2022 : ஷ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக இளம் வீரருக்கு வாய்ப்பு – ரசிகர்கள் பாராட்டு

1. ரோஹித் சர்மா : 132
2. விராட் கோலி : 99
3. எம்எஸ் தோனி : 98
4. சுரேஷ் ரெய்னா : 78
5. புவனேஸ்வர் குமார் : 72

Advertisement