
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 63-வது லீக் போட்டியில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது அந்த அணியிடம் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த தொடரின் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவிக்க பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி நான்காவது அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்த வேளையில் டெல்லி அணி தங்களது வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் கூறுகையில் : இந்த போட்டியின் போது எங்களது அணி வீரர்கள் சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ஆனாலும் இறுதியில் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது வருத்தம்.
குறிப்பாக இந்த போட்டியில் முதலில் பந்துவீசுகையில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு மும்பை அணியை கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆனால் கடைசி இரண்டு ஓவரின் போது அனைத்துமே மாறிவிட்டது. டி20 கிரிக்கெட்டில் முமென்ட்டம் என்பது மிகவும் முக்கியம் என்பதை இந்த போட்டியும் காண்பித்துள்ளது.
கடைசி 2 ஓவர்களில் 50 ரன்கள் வரை செல்லவே நாங்கள் 18 ஓவர்களாக பட்ட கஷ்டம் வீணாகிப்போனது. அந்த இரண்டு ஓவர் மும்பை அணிக்கு முமென்ட்டத்தை கொடுத்து விட்டது. இந்த போட்டியில் எங்களது அணி சார்பாக சமீர் ரிஸ்வி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். அவரிடம் உள்ள திறமை இந்த கடினமான ஆட்டத்தில் வெளிவந்துள்ளது. இனிவரும் காலங்களில் அவர் சிறப்பாக இன்னும் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : அந்த 2 பேர் கிட்ட பந்தை குடுத்தா மேட்ச் எங்க கன்ட்ரோல்க்கு வந்துடும்.. வெற்றிக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா பேட்டி
இந்த போட்டியின் போது எங்களால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. கடந்த 6-7 போட்டிகளாகவே நாங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே பெரியளவில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாகவும் டூப்ளிசிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.