ஐபிஎல் தொடரில் 18 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் ராகுல் அதிகபட்சமாக 63 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 33 ரன்களை குவித்தனர். அதன் பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். கடந்த நான்கு போட்டிகளாக துவக்க ஜோடி சோபிக்காத பட்சத்தில் இம்முறை வாட்சன் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்..
17.4 ஓவரில் 181 ரன்களை அடித்து சிஎஸ்கே அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தொடரை இரண்டாவது வெற்றியை பெற்றது. வாட்சன் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 83 ரன்களும், டூபிளெஸ்ஸிஸ் 53 பந்துகளில் 87 ரன்களில் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் சி.எஸ்.கே பெற்ற வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சிஎஸ்கே அணியின் வீரர் டு பிளிசிஸ் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளோம். நான் இந்த போட்டியில் இறுதி வரை விளையாட நினைத்தேன். 30 ரன்கள் 40 ரன்களில் அவுட் ஆகி வெளியேற கூடாது நினைத்தேன். வாட்சனுடன் அமைத்த பார்ட்னர்ஷிப் சிறப்பானது. அவர் ஒரு அருமையான பேட்ஸ்மேன் எங்கள் அணியில் உள்ள மிகப்பெரிய வீரர் இவர்தான்.
கடந்த போட்டியில் நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் பேட்டிங்கில் சோபிக்க வில்லை. இன்று வாட்சன் எங்க அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தார். 3-4 கேம்கள் போனதும் அணி நல்ல பார்மிற்கு வரும் என்று நினைத்தோம். அந்த வகையில் தற்போது தான் அணி பார்மிற்கு திரும்பியுள்ளோம். இந்தப் பெருமையெல்லாம் தோனி மற்றும் பிளமிங் ஆகிய இவருக்கே சேரும் ஏனெனில் தோல்விகளால் அணியை மாற்றாமல் எப்போதும் எங்களது வீரர்களை ஆதரித்து வருகிறார்கள்.
ஒரு சில போட்டிகளில் ஏற்படும் தோல்விகளால் அணியை மாற்றாமல் இருப்பதே சென்னை அணியின் மிகப்பெரிய பலம். மேலும் அணி நிர்வாகமும் எங்களது அனுபவத்தை நம்புகிறது அதனால் எந்த ஒரு வீரரும் அணியில் இருந்து நீக்குவது கிடையாது. எங்களது கேப்டன் மற்றும் கோச் ஆகியோரே இந்த வெற்றிகளுக்கு காரணமாக நாங்கள் நினைக்கிறோம் என்று டு பிளேசிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.