IND vs RSA : ரிஷப் பண்ட் இதை செய்தால் கில்கிறிஸ்ட் மாதிரி வருவார் – சஞ்சய் பாங்கர் ஆதரவு

Rishabh Pant Adam Gilchrist
Advertisement

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமநிலையுடன் முடிந்துள்ளது. கடந்த ஜூன் 9இல் தலைநகர் டெல்லியில் துவங்கிய இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் 12 தொடர் வெற்றிகளுடன் உலக சாதனை படைத்து வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை தடுத்து நிறுத்தி தோல்வியை பரிசளித்து அதிர்ச்சி கொடுத்தது. அதனால் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த இந்தியா அதற்காக அஞ்சாமல் விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெற்ற அடுத்த 2 போட்டிகளில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் துல்லியமாக செயல்பட்டு பெரிய வெற்றிகளை சுவைத்தது.

IND vs RSA Rishabh Pant Keshav Maharaj

அதனால் சொந்த மண்ணில் எங்களை சாய்ப்பது அவ்வளவு சுலபமல்ல என்று தென் ஆப்பிரிக்காவுக்கும் காட்டிய இந்தியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. அந்த நிலைமையில் இந்த தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான 5-வது போட்டி ஜூன் 19 இரவு 7 நடைபெற்றது. ஆனால் மழையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு 7.50 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் 28/2 என இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தபோது வந்த மழை ஒரு மணி நேரம் அடித்து நொறுக்கியதால் இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர்.

- Advertisement -

சொதப்பிய பண்ட்:
அதனால் இரு அணிகளுமே இந்த தொடரின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பையை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுத்த நிலையில் அவரின் இடத்தில் கேப்டனாக விளையாடிய ரிஷப் பண்ட் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் என அனைத்திலும் மொத்தமாக சொதப்பினார். முதலில் ஒரு கேப்டனாக எந்த பவுலரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற சரியான அடிப்படையான முடிவை எடுப்பதில் தடுமாறிய அவர் சஹால் போன்ற பவுலர்கள் ஒருசில ஓவர்கள் சுமாராக வீசியதால் அவர்களின் திறமை மீது நம்பிக்கை இழந்து முழுமையான 4 ஓவர்களை கொடுக்கவில்லை.

RIshabh Pant Poor Batting

அதனால் முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொண்ட அவர் ஒரு பேட்ஸ்மேனாக இந்த தொடரில் வெறும் 57 ரன்களை மட்டுமே எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றவில்லை. அதிலும் சொல்லி வைத்தார் போல் 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவுட்டான அவர் பேட்டிங்கில் கொஞ்சம்கூட முன்னேறவில்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் விமர்சனத்திற்கு உள்ளானார்.

- Advertisement -

சச்சின் மாதிரி:
இந்நிலையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் 70 போட்டிகள் வரை தடுமாறியதாக கூறும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் வருங்காலங்களில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் போல வருவார் என்று ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு.

“இதை 3 வருடமாக நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சச்சின் டெண்டுல்கரை நீங்கள் பார்த்தால் அவர் தனது முதல் சதத்தை 75 அல்லது 76-வது போட்டியில் தான் மிடில் ஆர்டரில் தடுமாறிய பின் அதுவும் நியூசிலாந்துக்கு எதிராக தொடக்க வீரராக களமிறங்கிய பின்புதான் அடித்திருந்திருப்பார். அந்த வகையில் தற்சமயம் அதுபோன்றதொரு இடது – வலது கை ஜோடிதான் இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. அந்த வேலையை இஷான் கிசான் செய்தாலும் இந்திய அணி எதிர்பார்க்கும் நீண்ட கால தீர்வாக ஆஸ்திரேலியாவுக்கு ஆடம் கில்கிறிஸ்ட் செய்ததைப் போல ரிஷப் பண்ட் செய்யக் கூடியவராக உள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது மிடில் ஆர்டரில் 75+ ஒருநாள் போட்டிகளாக தடுமாறிக் கொண்டிருந்த சச்சின் கடந்த 1994இல் நவ்ஜோத் சித்துவுடன் ஓபனிங் பேட்ஸ்மேனாக ஆக்லாந்தில் நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே 82 (49) ரன்களை தெறிக்கவிட்டு அதன்பின் அந்த இடத்தில் 15,310 ரன்களை வெளுத்து வாங்கினார். அதுபோல 48 டி20 போட்டிகளில் 741 ரன்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருக்கும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கில்கிறிஸ்ட் போல ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினால் அபாரமாக செயல்படுவார் என்று சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

Pathan

இந்த முடிவு தற்போது இல்லை என்றாலும் வருங்காலத்தில் இந்திய அணி நிர்வாகம் எடுத்தால் நிச்சயம் பயன் கிடைக்கும் என்று மற்றொரு இந்திய வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவரின் ஆஃப் சைட் பிரச்சனையை நிறைய நாட்களாக பேசி வருகிறோம். ஆனால் அதுவே பீல்டர்கள் உள் வட்டத்திற்குள் நின்றால் என்ன நடக்கும்? ரிஷப் பண்ட்டை பவர்ப்ளே ஓவர்களில் பயன்படுத்தினால் பவுலர்கள் அந்த அளவுக்கு அகலமாக பந்து வீச முடியாது”

இதையும் படிங்க : IND vs RSA : துல்லியம் தரத்திற்கு சான்றாக ஜொலிக்கும் புவி – டி20 கிரிக்கெட்டில் தெ.ஆ’வுக்கு எதிராக புதிய வரலாற்று சாதனை

“அந்த சமயத்தில் ரிஷப் பண்ட் அவர்களுக்கு நிச்சயமாக சவாலை கொடுப்பார். அவர் குறைந்த காலத்தில் சர்வதேச அளவில் 3500க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். எனவே இந்த ஐடியா சரியாக இருக்கும் என்று நானும் நினைக்கிறேன். இது இப்போது நடை பெறவில்லை என்றாலும் வருங்காலத்தில் நடக்கலாம்” என்று கூறினார்.

Advertisement