- Advertisement -
உலக கிரிக்கெட்

அர்ப்பணிப்பின் அடையாளம், விடைபெற்றார் இங்கிலாந்தின் வெள்ளி நாயகன் இயன் மோர்கன் – ரசிகர்கள் சோகத்துடன் வாழ்த்து

இங்கிலாந்துக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த முதல் கேப்டனாக சரித்திர சாதனை படைத்துள்ள இயன் மோர்கன் கேப்டன் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மொத்தமாக ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். கடந்த 1986இல் அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் பிறந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் கடந்த 2004 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் விளையாடினார். அதில் அதிக ரன்கள் எடுத்து அயர்லாந்து பேட்ஸ்மேனாக மேலும் அசத்திய அவர் 2006 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையின் கேப்டனாகவும் செயல்பட்டார்.

அதனால் அந்த வருடத்திலேயே அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த அவர் ஸ்காட்லாந்துக்கு எதிரான அறிமுக ஒருநாள் போட்டியிலேயே 99 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் வெற்றிக்கு பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன்பின் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்த அவரின் திறமையை உணர்ந்த இங்கிலாந்து வாரியம் 2009இல் தங்களது நாட்டுக்காக சர்வதேச அரங்கில் 3 வகையான அணியிலும் விளையாடும் வாய்ப்பை கொடுத்து வரவேற்றது.

- Advertisement -

அதிரடிப்படை தலைவன்:
ஆரம்பம் முதலே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிய அவர் 16 போட்டிகளில் 700 ரன்களை மட்டுமே எடுத்தாலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் எனப்படும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிரடியாக ரன்களை சேர்த்து இங்கிலாந்து பேட்டிங்கில் முக்கிய முதுகெலும்பு வீரராக உருவெடுத்தார். அப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த நிலையில் அலஸ்டேர் குக் தலைமையில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த காரணத்தால் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய இங்கிலாந்து வாரியம் இயன் மோர்கனை கடந்த 2014இல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் கேப்டனாக அறிவித்தது.

அந்த நிலைமையில் ஆஸ்திரேலியாவில் நடந்த 2015 உலகக்கோப்பையில் வழிநடத்திய அவரது தலைமையில் காலிறுதிப் போட்டியில் கத்துக்குட்டியான வங்கதேசத்திடம் தோல்வியடைந்த இங்கிலாந்து அவமானத்துடன் வெளியேறியது. அப்படி ஆரம்பமே மிகப்பெரிய சறுக்கலாக அமைந்ததால் விமர்சனங்களுக்கு உள்ளான அவர் இனிமேல் தடுப்பாட்டம் வேலைக்காகாது அதிரடி மட்டுமே வெற்றிக்கு உதவும் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார்.

- Advertisement -

வெள்ளி நாயகன்:
அதற்காக அதிரடியை அதிகம் விரும்பக் கூடிய ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, மொய்ன் அலி போன்றவகளுக்கு அதிக வாய்ப்பையும் ஆதரவையும் கொடுத்து அவர் ஐபிஎல் தொடரில் விளயாடுவதற்கான ஊக்கத்தை கொடுத்து அடுத்த சில வருடங்களில் இங்கிலாந்தை அதிரடி படையாக மாற்றினார். அதன் பயனாக வரலாற்றில் இல்லாத அளவுக்கு இருதரப்பு தொடர்களில் நிறைய வெற்றிகளை குவிக்கத் தொடங்கிய இங்கிலாந்து தங்களது சொந்த மண்ணுக்கு வரும் வெளிநாட்டு அணிகளை சரமாரியாக அடித்து பெரும்பாலான போட்டிகளில் 400 ரன்களை விளாசி மிரட்டியது.

அதுவரை கிரிக்கெட்டை கண்டுபிடித்து 1975, 1976, 1983, 1999 ஆகிய வருடங்களில் சொந்த மண்ணில் உலக கோப்பையை நடத்திய போதிலும் அதை தொட்டுக் கூட பார்க்க முடியாத இங்கிலாந்து எதிரணிகளுக்கு மட்டுமே பரிசளித்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாய் அயர்லாந்தில் பிறந்த விடிவெள்ளியாய் வந்த இயன் மோர்கன் தலைமையில் அதிரடி படையாக 2019 உலக கோப்பையில் அற்புதமாக செயல்பட்ட இங்கிலாந்து தொடவே முடியாது என நினைத்த உலக கோப்பையை முதல் முறையாக சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தொட்டு புதிய வரலாற்று சாதனை படைத்தது. அதனால் உலக கோப்பையை வென்று கொடுத்த முதல் இங்கிலாந்து கேப்டன் என்ற காலத்தால் அழிக்கமுடியாத பெயரைப் பெற்ற இயன் மோர்கன் அந்நாட்டு ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்தார்.

- Advertisement -

காயம், பார்ம், அர்ப்பணிப்பு:
இருப்பினும் சமீப காலங்களில் அடிக்கடி காயங்களை சந்தித்த அவர் அதனாலேயே பெரிய அளவில் ரன்களை சேர்க்க முடியாமல் சுமாரான பார்மல் தவித்து வந்தார். குறிப்பாக 2021க்கு பின் 5 ஒருநாள் போட்டிகளில் 103 ரன்களை 25.75 என்ற சராசரியுடன் 43 போட்டிகளில் 643 ரன்களை 17.86 என்ற சராசரியிலும் எடுத்து பார்முக்கு திரும்ப முடியாமல் தவித்த அவரை ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நிர்வாகமும் கழற்றி விட்டது.

கடந்த வாரம் நெதர்லாந்துக்கு எதிராக 498 ரன்களை குவித்து இங்கிலாந்து உலக சாதனை படைத்த தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டான அவர் காயத்தால் அடுத்த 3-வது போட்டியில் பங்கேற்கவில்லை. அப்படி ஒரு வருடமாகியும் அடுத்தடுத்த காயங்களால் பார்முக்கு திரும்ப முடியாத காரணத்தால் இனிமேலும் தான் உருவாக்கிய அதிரடி இங்கிலாந்து படைக்கு தாமே ஒரு பாரமாக இருக்கக் கூடாது என்று கருதிய அவர் அர்ப்பணிப்புடன் இன்று ஓய்வு முடிவை 35 வயதிலேயே அறிவித்துள்ளது ரசிகர்களின் நெஞ்சங்களில் தொட்டு சோகமடைய வைத்துள்ளது.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “ஆழ்ந்த ஆலோசனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எனது ஓய்வை அறிவிக்கை இங்கு வந்துள்ளேன். இந்த சமயத்தில் சக வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள் எனது கேரியர் வெற்றியாவதற்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வீரராகவும் கேப்டனாகவும் சாதித்தவைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது”

இதையும் படிங்க : ரோஹித்துக்கு பதில் யார் கேப்டன்? ஐ.சி.சி எழுப்பிய கேள்வி – நேரடியான பதிலை அளித்த ஹர்பஜன் சிங்

“வரும் காலங்களில் இங்கிலாந்தின் வெள்ளை பந்து கிரிக்கெட் இன்னும் பிரகாசமாக இருக்குமென்று நம்புகிறேன். முந்தைய காலங்களை விட தற்போது நல்ல அனுபவமும் பலமும் ஆழமும் நம்மிடம் உள்ளது. எனவே நல்ல வருங்காலத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நான் தொடர்ச்சியாக முடிந்த அளவுக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளேன்” என்று கூறினார். எத்தனையோ வீரர்கள் காலம் கடந்தும் பார்முக்கு திரும்பலாம் என்ற நம்பிக்கையில் விளையாடிக் கொண்டிருக்கையில் இந்த வயதிலேயே இவ்வளவு அர்ப்பணிப்புடன் விடைபெற்றுள்ள மோர்கனுக்கு உலக அளவில் உள்ள அனைத்து சோகத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -
Published by