
உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னையை வெளியேற்றிய பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெற்ற 68வது லீக் போட்டியில் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 219 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 47, கேப்டன் டு பிளேஸிஸ் 53 ரன்கள் எடுத்தனர். ஆனால் அதைத் துரத்திய சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் 0, சிவம் துபே 7, மிட்சேல் 4 ரன்களில் அவுட்டாகி கொடுத்தனர். அதனால் ரச்சின் ரவீந்திர 61, ரகானே 33, தோனி 25, ஜடேஜா 42* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 191/7 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை தோல்வியை சந்தித்து பரிதாபமாக வீட்டுக்கு கிளம்பியது.
திருப்பு முனை:
மறுபுறம் தொடர்ச்சியாக 6வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக யாஷ் தயாள் 2 விக்கெட்டுகள் எடுத்தார். குறிப்பாக ரன் ரேட் அடிப்படையில் சென்னை பிளே ஆஃப் செல்வதற்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அந்த ஓவரை வீசிய யாஷ் தயாள் முதல் பந்திலேயே தோனிக்கு எதிராக 110 மீட்டர் மெகா சிக்சரை கொடுத்தார்.
அதனால் சென்னை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த பந்திலேயே தோனியை அவுட்டாக்கிய அவர் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது 2023 ஐபிஎல் ஃபைனல் போல ஜடேஜாவையும் ஃபினிஷிங் செய்ய விடவில்லை. இந்நிலையில் தோனி முதல் பந்திலேயே சிக்சர் அடித்ததும் கடந்த வருடம் கடைசி ஓவரில் ரிங்கு சிங் 5 சிக்ஸர்கள் அடித்தது நினைவுக்கு வந்ததாக யாஷ் தயாள் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தாலும் ஸ்லோயர் பந்துகளை வீச வேண்டும் என்பதை திட்டமாக வைத்திருந்தேன். என்னை சுற்றியிருந்த சீனியர் வீரர்கள் ஆதரவு கொடுத்தனர். நான் போட்டியின் மிகவும் முக்கியமான கடைசி ஓரை வீசினேன். எம்எஸ் தோனியின் விக்கெட்டை எடுத்தது போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது. ஆனால் முதல் பந்திலேயே சிக்ஸர் கொடுத்ததும் மனதளவில் நான் ரிங்கு சிங் ஓவருக்கு சென்று விட்டேன்”
இதையும் படிங்க: அந்த 3 பேரும் எங்களுடன் இல்லாதது தான் இந்த தொடரில் எங்களது தோல்விக்கு காரணம் – ருதுராஜ் கெய்க்வாட் வருத்தம்
“இருப்பினும் இம்முறை இதுவரை நன்றாக பந்து வீசியதால் ஸ்கோர் போர்டை பார்க்காமல் தொடர்ந்து பந்து வீசு என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். டு பிளேஸிஸ் நம்ப முடியாத கேப்டன். சிறந்த விளையாட்டு வீரரான அவர் களத்தில் நேர்மறையை கொண்டு வருகிறார். விராட் கோலி போன்றவர் களத்தில் இருக்கும் போது நீங்கள் அழுத்தத்தை சந்திக்க மாட்டீர்கள்” என்று கூறினார்.