தொடர் தோல்விகள் எதிரொலி ! கௌரவத்துடன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த இங்கிலாந்து நட்சத்திரம்

Root
- Advertisement -

கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து சமீப காலங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்தது. அதிலும் நட்சத்திர வீரர் ஜோ ரூட் தலைமையில் விளையாடி வரும் அந்த அணி அடுத்தடுத்த தோல்விகளால் திணறி வந்தது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் படுமோசமாக செயல்பட்ட அந்த அணி 4 – 0 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வி தொடரை இழந்து வரலாற்று தோல்வியை சந்தித்தது.

அது கூட பரவாயில்லை கடந்த 2021-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் மண்ணைக் கவ்விய இங்கிலாந்து 1 – 0 என தொடரை இழந்தது. அதன்பின் விராட் கோலி தலைமையிலான இந்தியாவுக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து பின்தங்கியுள்ளது.

- Advertisement -

இதற்கு காரணம் அந்த அணியின் மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் என்பதையும் தாண்டி அதன் கேப்டன் ஜோ ரூட் எடுக்கும் தவறான கேப்டன்ஷிப் முடிவுகள் தோல்விக்கான முக்கிய பங்காற்றியது அப்பட்டமாக தெரிந்தது. அதனால் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலக வேண்டும் என பல குரல்கள் எழுந்தது. இருப்பினும் அதைத்தொடர்ந்து கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு மீண்டும் அவரை அந்நாட்டு வாரியம் கேப்டனாக அறிவித்தது.

பதவி விலகிய ரூட்:
மேலும் அடுத்தடுத்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் போன்ற ஜாம்பவான் வீரர்களை கழற்றிவிட்டு அந்நாட்டு வாரியம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. இருப்பினும் கூட வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்தின் ஆட்டம் செல்லுபடியாகாததால் 1 – 0 என்ற கணக்கில் மீண்டும் அந்த அணி தோற்றது. அதன் காரணமாக வாரியம் அதிரடியாக பணி நீக்கம் செய்வதற்கு முன்பாக கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் தாமாக விலகுவதே கௌரவம் என முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் உட்பட பலரும் போர்க்கொடி உயர்த்தினார்கள்.

- Advertisement -

இருப்பினும் பேட்டிங்கில் தொடர்ந்து மலைபோல ரன்களைக் குவித்து நல்ல பார்மில் இருக்கும் அவர் நாட்டுக்காக தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்புவதாகவும் அதற்காக அணியில் உள்ள இதர வீரர்களின் ஆதரவு தமக்கு உள்ளதாகவும் வெஸ்ட் இண்டீஸ் தோல்விக்குப் பின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த ஜோ ரூட் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்த அவர் கூறியது பின்வருமாறு. “கடந்த 5 வருடங்களுக்கு முன் பொறுப்பேற்ற நான் நாட்டுக்காக கேப்டனாக பணியாற்றியதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட்டில் நானும் ஒரு முக்கிய புள்ளியாக செயல்பட்டதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். நாட்டுக்காக தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்பினேன். ஆனால் சமீபத்தில் அது எனக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தியது மற்றும் விளையாட்டில் இருந்து விலகி என் மீது ஏற்படுத்திய தாக்கத்தை வெளிக்காட்டியது” என்று கூறினார்.

- Advertisement -

இத்துடன் இந்த தருணங்களில் தனக்கு ஆதரவளித்த குடும்பத்தினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் சக அணி வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் நன்றி தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து ஒரு பேட்ஸ்மேனாக இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு பணியாற்ற உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அடுத்ததாக பொறுப்பேற்க உள்ள கேப்டனுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமான ரூட்:
என்னதான் சமீப காலங்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும் 64 போட்டிகளில் இங்கிலாந்தை வழிநடத்திய அவர் அதில் 27 வெற்றிகளை பெற்று டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த இங்கிலாந்து கேப்டன் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இங்கிலாந்து கேப்டன் போன்ற சாதனைகளை படைத்துள்ளார். அதற்கு ஈடாக 26 தோல்விகளையும் பதிவு செய்துள்ள அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக தோல்விகளை பதிவு செய்த இங்கிலாந்து கேப்டன் என்ற மோசமான சாதனைக்கும் சொந்தக்காரராக உள்ளார்.

அதேபோல் அவரின் ஒருசில கேப்டன்ஷிப் முடிவுகள் சொதப்பலாக இருந்தாலும் அவரின் பேட்டிங் எப்போதும் மோசமாக இருந்ததில்லை. அந்த வகையில் 64 போட்டிகளில் 5295 ரன்களைக் குவித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இங்கிலாந்து கேப்டன் என்ற சாதனையும் படைத்துள்ளார். கடந்த 2017 முதல் 2022 வரை கேப்டனாக செயல்பட்ட அவர் தலைமையில் 2018இல் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 4 – 1 என்ற கணக்கிலும் 2020இல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 – 1 என்ற கணக்கிலும் இங்கிலாந்து தொடரை வென்றது.

அத்துடன் 2021இல் இலங்கை மண்ணில் 2001க்கு பின் அவர் தலைமையில் 2 – 0 என தொடரை வென்ற இங்கிலாந்து சாதனையும் படைத்தது. மொத்தத்தில் நிறைய நினைவுகளை கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக விடைபெறும் ஜோ ரூட்டுக்கு பல முன்னாள் இந்நாள் இங்கிலாந்து வீரர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement