- Advertisement -
உலக கிரிக்கெட்

823 ரன்ஸ்.. தார் ரோட் பிட்ச்சில் பாகிஸ்தானை அழவிட்ட இங்கிலாந்து.. இந்தியாவை முந்தி 20 வருட உலக சாதனை

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி முல்தான் நகரில் அக்டோபர் 7ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அபாரமாக பேட்டிங் செய்து 556 ரன்கள் குவித்ததாக அனைவரும் நினைத்தனர். அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சான் மசூத் 151, அப்துல்லா ஷபிக் 102, ஆஹா 104* ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக் லீச் 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து உண்மையாகவே பாகிஸ்தான் அபாரமாக விளையாடவில்லை பிட்ச் தார் ரோட் போல இருக்கிறது என்பதை நிரூபித்தது. ஏனெனில் அந்த அணிக்கு கேப்டன் ஓலி போப் துரதிஷ்டவசமாக டக் அவுட்டானார்.

- Advertisement -

பரிதாப பாகிஸ்தான்:

ஆனால் அடுத்ததாக வந்த ஜோ ரூட் தார் ரோட் பிட்ச்சில் சுமாராக பந்து வீசிய இங்கிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார். அவருடன் எதிர்புறம் சேர்ந்து விளையாடிய ஜாக் கிராவ்லி 78, பென் டக்கெட் 84 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் அடுத்து வந்த இளம் வீரர் ஹரி ப்ரூக் தம்முடைய பங்கிற்கு பாகிஸ்தான் பவுலர்களைப் பந்தாடினார்.

அந்த வகையில் ஜோ ரூட் – ஹரி ப்ரூக் ஆகியோர் ஜோடி சேர்ந்து தார் ரோட்டில் பாகிஸ்தான் வீரர்களை ஸ்கூல் பவுலர்களைப் போல பந்தாடி சதமடித்தனர். அப்போதும் அவுட்டாகாமல் அடம் பிடித்த அந்த ஜோடி நேரம் செல்ல செல்ல பாகிஸ்தான் ரசிகர்கள் கண்கள் கலங்கும் அளவுக்கு இரட்டை சதமடித்தனர். அதன் பின்பும் ஓயாத அந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 454 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தான் ரசிகர்களை அழ விட்டது.

- Advertisement -

உலக சாதனை ஸ்கோர்:

அதில் ஒரு வழியாக ஜோ ரூட் 262 ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய ப்ரூக் முச்சதம் அடித்து 317 ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் 823-7 ரன்களுடன் பாகிஸ்தானை அடித்தது போதும் என்று இங்கிலாந்து தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளர் செய்து கொண்டது. இதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற இந்தியாவின் சாதனையை உடைத்த இங்கிலாந்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: நான் பேட்டிங் செய்ய உள்ள போனதுமே நிதீஷ் ரெட்டி என்கிட்ட இதைத்தான் சொன்னாரு – ரிங்கு சிங் பகிர்வு

இதற்கு முன் கடந்த 2004ஆம் ஆண்டு இதே முல்தானில் இந்தியா 675-5 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 வருடங்கள் கழித்து 800 ரன்கள் அணியாகவும் இங்கிலாந்து சாதனை படைத்தது. இது போக ரூட், ப்ரூக் ஆகியோரும் பல சாதனைகளை படைத்தனர். மறுபுறம் சொந்த மண்ணில் அவமான அடிவாங்கிய பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சாய்ம் ஆயுப் 2, நாசீம் ஷா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -