15 வருடத்துக்கு பின் நியூசி மண்ணில் தெறிக்க விட்ட இங்கிலாந்து – ஸ்டீவ் வாக், விராட் கோலிக்கே சவால் விடும் பென் ஸ்டோக்ஸ்

- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே இவ்விரு அணிகளும் இழந்து விட்ட நிலையில் பிப்ரவரி 16ஆம் தேதியன்று மவுண்ட் மவுங்கனி நகரில் பகலிரவு போட்டியாக துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தங்களது வழக்கமான அதிரடி அணுகு முறையில் நியூசிலாந்து பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி 58.2 ஓவரிலேயே 325/9 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்வதாக அறிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

ஜாக் கிராவ்லி 4, ஜோ ரூட் 14, பென் ஸ்டோக்ஸ் 19 என சில வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் பென் டூக்கெட் 84 (68) ஓலி போப் 42 (65) ஹரி ப்ரூக் 89 (81) என இதர வீரர்கள் தேவையான ரன்களை அகதியாக எடுத்தனர். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக நெயில் வேக்னர் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 1, கேன் வில்லியம்சன் 4, டார்ல் மிட்சேல் 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் ஆரம்பத்திலேயே தடுமாறினாலும் தொடக்க வீரர் டேவோன் கான்வே 77 ரன்களும் டாம் ப்ளெண்டல் சதமடித்து 138 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

மிரட்டும் இங்கிலாந்து:
அதனால் ஓரளவு தப்பிய நியூசிலாந்தை முதல் இன்னிங்ஸில் 306 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் 4 விக்கெட்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 19 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து முன்பைவிட மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 374 ரன்கள் குவித்து மிரட்டியது. ஜாக் கிராவ்லி 28, ஓலி போப் 49, ஜோ ரூட் 57, ஹரி ப்ரூக் 54, ஓலி ராபின்சன் 39 என அந்த அணிக்கு களமிறங்கிய அனைத்து வீரர்களும் கணிசமான ரன்களை எடுத்து அசத்திய நிலையில் நியூசிலாந்து சார்பில் ப்ளாக் டிக்ஃனர் மற்றும் மைக்கல் பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.

இறுதியில் 394 என்ற கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 15, டேவோன் கான்வே 2, கேன் வில்லியம்சன் 0, ஹென்றி நிக்கோலஸ் 7, டாம் ப்ளன்டல் 1 என முக்கிய வீரர்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 28/5 என திண்டாடிய அந்த அணிக்கு டார்ல் மிட்சேல் 57* ரன்கள் எடுத்து போராடிய போதிலும் இதர வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் வெறும் 126 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் மற்றும் ஸ்டோர் பிராட் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

அதனால் 267 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை சுவைத்த இங்கிலாந்து 1 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன் நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து மண்ணில் 15 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றியை பதிவு செய்து இங்கிலாந்து நிம்மதியடைந்துள்ளது.

முன்னதாக இதே நியூசிலாந்து மண்ணில் பிறந்த பிரண்டன் மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் கடந்த வருடம் இங்கிலாந்தின் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டனர். அப்போதிலிருந்து என்ன ஆனாலும் அதிரடியை கைவிட மாட்டோம் என்ற அணுகுமுறையுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிகளை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து அவர்களது தலைமையில் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 10 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியர்களை செஞ்சு விட்ட விராட் கோலியின் 3 தங் லைஃப் தருணங்கள்

குறிப்பாக 90.90% என்ற சராசரியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வெற்றிகளை பதிவு செய்து வரும் இங்கிலாந்து எதிரணிகளை தெறிக்க விட்டு வருகிறது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன்களாக சாதனை படைத்துள்ள ஸ்டீவ் வாக் (71.92%), ரிக்கி பாண்டிங் (62.33%), விராட் கோலி (58.82%) ஆகியோர் போட்ட வெற்றி நடைக்கு சவால் கொடுக்கும் வகையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் வெற்றி நடை போட்டு வருகிறார்.

Advertisement