இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு வழியாக 27 வருடங்கள் கழித்து இலங்கை வெற்றி பெற்றது. சாதாரண இருதரப்பு தொடரில் இந்தியாவிடம் கால் நூற்றாண்டுக்குப் பின் பெற்ற அந்த வெற்றியை இலங்கை ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி தீர்த்தனர். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்குகிறது. அதற்கு தயாராகும் வகையில் 19 – 25 வயது இளம் வீரர்கள் அடங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இலங்கை அணி 4 நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போட்டி ஆகஸ்ட் 14ஆம் தேதி வோர்செஸ்டர் நகரில் துவங்கியது.
ஆரம்பத்திலேயே அடி:
அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை மிகவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மதுசங்கா 11, குசால் மெண்டிஸ் 26, ஏஞ்சலோ மேத்யூஸ் 11, சண்டிமால் 12, கேப்டன் டீ சில்வா 2, சமரவிக்ரமா 8 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கருணரத்னே 26, பிரபத் ஜெயசூர்யா 20 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து லயன்ஸ் சார்பில் அதிகபட்சமாக ஜமான் அக்தர் 5, ஜோஸ் ஹால் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் சிறப்பாக விளையாடி 324 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹம்சா சாய்க் 91, அல்ட்ரிஜ் 78, மெக்கின்னி 46 ரன்கள் எடுத்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதைத்தொடர்ந்து 185 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இலங்கை தோல்வியை தவிர்ப்பதற்காக முடிந்தளவுக்கு போராடியும் 306 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மதுசங்கா 77, கருணரத்னே 43, ஏஞ்சலோ மேத்யூஸ் 51, கேப்டன் டீ சில்வா 66 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து லயன்ஸ் சார்பில் அதிகபட்சமாக ஃபர்ஹான் அகமது 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் பாகிஸ்தான் வீரராக ஷாஹீன் அப்ரிடி படைக்கவுள்ள சாதனை – விவரம் இதோ
இறுதியில் 122 ரன்களை துரத்திய இங்கிலாந்து லயன்ஸ் ராபர்ட் யேட்ஸ் 57*, பென் மெக்கின்னி 20, ஜேம்ஸ் ரேவ் 23* ரன்கள் அடித்தனர். அதனால் 7 விக்கெட் வித்யாசத்தில் இங்கிலாந்து லயன்ஸ் எளிதாக வெற்றி பெற்றது. அந்த வகையில் முதல் தர இலங்கை அணியை இளம் வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து லயன்ஸ் உங்களுக்கு சொந்த மண்ணில் மிகவும் எளிதாக தோற்கடித்தது. மறுபுறம் முதன்மைத் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே இளம் இங்கிலாந்து அணியிடம் இலங்கை பரிதாப தோற்றது அந்நாட்டு ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.



