நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. வரும் ஜூலை மாதம் தங்களது சொந்த நாடான லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை ஏற்கனவே கிட்டத்தட்ட இழந்து விட்ட இங்கிலாந்து இத்தொடரில் தங்களது பலத்தை சோதிக்கும் முயற்சியுடன் களமிறங்கியுள்ளது. குறிப்பாக நியூசிலாந்து மண்ணில் பிறந்த ப்ரெண்டன் மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பயிற்சியாளர் மற்றும் கேப்டனாக பொறுப்பற்ற பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி சமீப காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை அடித்து நொறுக்கி வரும் இங்கிலாந்து இத்தொடரையும் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.
மறுபுறம் நடப்பு டெஸ்ட் சாம்பியனாக இருக்கும் நியூசிலாந்து ஏற்கனவே பைனல் வாய்ப்பை இழந்து விட்டாலும் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. அந்த நிலையில் பிப்ரவரி 16ம் தேதியன்று மௌன்ட் மௌங்கனி மைதானத்தில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு பந்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 4 (14) ரன்களில் ஆரம்பத்திலேயே அவுட்டானாலும் அடுத்து வந்த ஓலி போப்புடன் இணைந்த மற்றொரு தொடக்க வீரர் பென் டூக்கெட் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதைப் போல செயல்பட்டு அதிரடியாக ரன்களை சேர்த்தார்.
மிரட்டும் இங்கிலாந்து:
குறிப்பாக 2வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய அவர் 14 பவுண்டரியுடன் 84 (68) ரன்களை குவித்து அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்த சில ஓவர்களிலேயே ஓலி போப் 42 (65) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 14 ரன்களிலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 19 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் அதிரடியாக செயல்பட்ட இளம் வீரர் ஹாரி புரூக் தனது பங்கிற்கு 15 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியாக 89 (81) ரன்கள் குவித்து அவுட்டானார்.
அடுத்ததாக பென் போக்ஸ் 38, ஸ்டுவர்ட் ப்ராட் 2, ஜேக் லீச் 1 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள சொற்ப ரன்களில் அவுட்டானதால் 9 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து திடீரென்று இரவு உணவு இடைவெளிக்கு பின் தங்களது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதற்குள் 58.2 ஓவரிலேயே தேவையான அளவுக்கு அதிரடியாக செயல்பட்டு 325/9 ரன்கள் குவித்த அந்த அணி ஒரு விக்கெட் மட்டும் எஞ்சியிருந்த போது வித்தியாசமாக அதுவும் முதல் நாளிலேயே டிக்ளேர் செய்வதாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.
நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக நைல் வாக்னர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இருப்பினும் இது போல அதிரடியான அணுகு முறையால் கடந்த 10 போட்டிகளில் 9 வெற்றிகளை பதிவு செய்துள்ள இங்கிலாந்து அதே யுக்தியுடன் இப்போட்டியிலும் வெறும் 58 ஓவரில் ஒருநாள் கிரிக்கெட்டைப் போல அதிரடியாக விளையாடி 325/9 ரன்கள் குவித்து நியூசிலாந்தை அடித்து நொறுக்கியது என்றே சொல்லலாம். சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 46 வருடங்களுக்கு பின் முதல் நாளிலேயே 9 டிக்கெட்டுகள் இழந்த சமயத்தில் டிக்ளேர் செய்த அணி என்ற பெயரையும் இங்கிலாந்து பெற்றுள்ளது.
இதற்கு முன் கடந்த 1974ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் பாகிஸ்தான் முதல் நாளில் 44.5 ஓவரில் 130/9 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. அனேகமாக இரவு நேரத்தில் இளஞ்சிவப்பு பந்தில் சவாலை கொடுக்கலாம் என்று அந்த முடிவை எடுத்திருப்பார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் அடுத்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டாம் லாதம் 1, கேன் வில்லியம்சன் 6, ஹென்றி நிக்கோலஸ் 4 என டாப் ஆர்டர் வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த இங்கிலாந்து மிரட்டியது.
இதையும் படிங்க: எதிர்க்காலம் ஆனா அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு, நம்ம நிலைமையை யோசிச்சு பாருங்க – அஷ்வின் கருத்துக்கு அப்ரிடி பதில்
அதனால் முதல் நாள் முடிவில் 37/3 என திண்டாடி வரும் நியூசிலாந்துக்கு களத்தில் டேவோன் கான்வே 18*, நெய்ல் வாக்னர் 4* ரன்களுடன் இருக்க இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மொத்தத்தில் நியூசிலாந்து மண்ணில் பிறந்த ஸ்டோக்ஸ் – மெக்கல்லம் ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக தங்களது சொந்த மண்ணையே அடித்து நொறுக்கும் வேலைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.