Ashes 2023 : எழுந்திருக்க முடியாத அளவுக்கு உலக சாம்பியனை அடித்த இங்கிலாந்து, தலைகீழாக மாறி திணறும் ஆஸி – வெல்லப்போவது யார்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்டு சொந்த மண்ணில் தலை குனிந்த இங்கிலாந்து கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

அந்த நிலையில் ஹெண்டிங்க்லே நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஆஷஸ் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டதுடன் ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்தது. அதைத்தொடர்ந்து இந்த தொடரின் முக்கியமான 4வது போட்டி ஜூலை 19ஆம் தேதி மான்செஸ்டர் மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 317 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

திணறும் உலக சாம்பியன்:
டேவிட் வார்னர் 32, மார்னஸ் லபுஸ்ஷேன் 51, ஸ்டீவ் ஸ்மித் 41, டிராவிஸ் ஹெட் 48, மிட்சேல் மார்ஷ் 51 என அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல துவக்கத்தைப் பெற்றும் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு தொடக்க வீரர் பென் டூக்கெட் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி அதிரடியாக விளையாடி 21 பவுண்டரி 3 சிக்சருடன் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை நழுவி விட்டாலும் 189 (182) ரன்கள் குவித்து இங்கிலாந்தை முன்னிலைப்படுத்தி ஆட்டமிழந்தார்.

அவருடன் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட மொய்ன் அலி தனது பங்கிற்கு 54 (82) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 84 (95) ரன்களும் எடுத்து இங்கிலாந்தை மேலும் வலுப்படுத்திய நிலையில் அடுத்ததாக வந்த ஹரி ப்ரூக் வழக்கத்திற்கு மாறாக சற்று நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதம் கடந்து 61 (100) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுபுறம் கேப்டனுக்கு அடையாளமாக செயல்பட பென் ஸ்டோக்ஸ் தனது பங்கிற்கு 51 (74) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

ஆனால் கடைசி நேரத்தில் நம்பிக்கை நட்சத்திரம் ஜானி பேர்ஸ்டோ நீண்ட நாட்கள் கழித்து தமக்கே உரித்தான பாணியில் அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி விரைவாக ரன்களைக் குவித்து சதத்தை நெருங்கினார். இருப்பினும் எதிர்ப்புறம் கிறிஸ் ஓக்ஸ் 0, மார்க் வுட் 6, ஸ்டுவர்ட் ப்ராட் 7, ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 என் டெயில் எண்டர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் பரிதாபத்தை சந்தித்த அவர் வெறும் 1 ரன்னில் சதத்தை தவற விட்டு 10 பவுண்டரி 4 சிக்ஸருடன் 99* (81) ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் சென்றார்.

அப்படி பெரும்பாலான பேட்ஸ்மேன்களின் சிறப்பான ரன் குவிப்பால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 592 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 275 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 18, டேவிட் வார்னர் 28 என தொடக்க வீரர்கள் நிதானமாக விளையாட முயற்சித்து சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித்தும் 17 ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

போதாகுறைக்கு டிராவிஸ் ஹெட் 1 ரன்னில் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்ததால் 3வது நாள் முடிவில் 113/4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள ஆஸ்திரேலியா 162 ரன்கள் பின்தங்கி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு போராடி வருகிறது. அந்த அணிக்கு களத்தில் மார்னஸ் லபுஸ்ஷேன் 44*, மிட்சேல் மார்ஷ் 1* ரன்களுடன் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறார்கள் என்ரே சொல்லலாம்.

இதையும் படிங்க:IND vs WI : 500வது போட்டியில் வரலாறு படைத்த கிங் கோலி – லாராவை மிஞ்சி சச்சினின் மற்றுமொரு உலக சாதனையை உடைத்து அபாரம்

இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 3* விக்கெட்களை எடுத்துள்ள நிலையில் இன்னும் 2 நாட்கள் எஞ்சியிருப்பதால் அந்த அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ஆரம்பத்தில் ஒயிட் வாஷ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து இப்படி கொதித்தெடுத்து கம்பேக் கொடுக்க துவங்கியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement