PAK vs ENG : உயிரே போனாலும் அதை விடமாட்டோம், 2வது டெஸ்டிலும் 120 வருட புதிய உலக சாதனை படைத்தும் – தடுமாறும் இங்கிலாந்து

- Advertisement -

பாகிஸ்தான் மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து தார் ரோடு போல அமைக்கப்பட்டிருந்த ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியின் முதல் நாளிலேயே 506 ரன்கள் குவித்து 2வது இன்னிங்ஸில் சரியான நேரத்தில் தைரியமாக டிக்ளேர் செய்து 74 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று 1 – 0* என முன்னிலை பெற்றது. குறிப்பாக புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கலம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான அணுகுமுறையுடன் சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் இந்தியாவை அடித்து நொறுக்கி அடுத்தடுத்த வெற்றிகளைக் கண்ட அந்த அணி வெளிநாடுகளில் சாதிக்க முடியுமா என்ற கேள்வி நிலவியது.

அந்த நிலைமையில் நிச்சயம் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட முதல் போட்டியில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி அபார வெற்றி பெற்ற அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளதாக அனைவரும் பாராட்டினர். அந்த நிலையில் டிசம்பர் 9ஆம் தேதியான்று முல்தான் நகரில் நடைபெற்ற 2வது போட்டியிலும் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து வழக்கம் போல அதிரடி சரவெடியான பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் தார் ரோடு போல அமையாத முல்தான் பிட்ச் சற்று சுழலுக்கு சாதகமாக இருந்ததை பயன்படுத்திய பாகிஸ்தானின் இளம் ஸ்பின்னர் அப்ரார் அகமது அறிமுக போட்டியிலேயே மாயாஜாலத்தை நிகழ்த்தினார்.

- Advertisement -

உயிரே போனாலும்:
அவரது சுழலில் ஜாக் கிராவ்லி 19 (37) ரன்களில் அவுட்டானாலும் அடுத்ததாக 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பென் டன்கட் அதிரடியாக 63 (49) ரன்களும் போலி போப் 60 (61) ரன்களும் குவித்து அவரிடமே ஆட்டமிழந்தனர். அதனால் நிதானத்தை காட்ட முயன்ற ஜோ ரூட் 8, ஹரி ப்ரூக் 9, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 30, வில் ஜேக்ஸ் 31 என அடுத்து வந்த முக்கிய வீரர்களும் அவரது சுழலிலேயே அவுட்டாகி சென்றார்கள். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாதால் இங்கிலாந்து 281 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளும் ஜாகித் முகமது 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிசை தொடங்கிய பாகிஸ்தானுக்கு இமாம்-உல்-ஹக் 0, சபிக் 14 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் 61* (76) ரன்களும் ஷகீல் 32* (46) ரன்களும் எடுத்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது 107/2 ரன்களுடன் உள்ள பாகிஸ்தான் 174 ரன்கள் பின்தங்கியிருந்தாலும் 8 விக்கெட் கைவசம் இருப்பதால் நல்ல நிலையில் உள்ளது.

- Advertisement -

மறுபுறம் சூழலுக்கு தகுந்தார் போல் விளையாட வேண்டிய நிலைமை வந்தாலும் உயிரே போனாலும் அதிரடியை மட்டும் கைவிட மாட்டோம் என்ற அணுகு முறையுடன் விளையாடிய இங்கிலாந்து 281 ரன்களை 51.4 ஓவரிலேயே எடுத்து அசத்தினாலும் விக்கெட்டுகளை இழந்து பின்னடைவை சந்தித்தது. அதிலும் குறிப்பாக உணவு இடைவெளிக்கு முன்பே 5 விக்கெட்டுகளை இழந்தாலும் அதிரடியை மட்டும் விடமாட்டோம் என்ற வகையில் அடித்து நொறுக்கிய இங்கிலாந்து 180 ரன்களை குவித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் நாளிலேயே உணவு இடைவெளிக்கு முன் அதிக ரன்கள் குவித்த அணி என்ற தென்னாபிரிக்காவின் 120 வருட சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தது.

அந்த பட்டியல்:
1. 180/5 – இங்கிலாந்து, பாகிஸ்தானுக்கு எதிராக, முல்தான், 2022*
2. 179/1 – தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜோகன்ஸ்பெர்க், 1902
3. 174/0 – இங்கிலாந்து, பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டி, 2022
4. 173/0 – ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டர், 1902

இதையும் படிங்க: இது இந்திய அணியே இல்ல, யாருமே நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் விளையாடல – மதன் லால் வேதனையுடன் விமர்சித்தது என்ன

இருப்பினும் பிளாட்டான பிட்ச்களில் மட்டுமே இங்கிலாந்தின் அதிரடி அணுகுமுறை செல்லுபடியாகும் என்று சுழலுக்கு சாதகமான ஆடுகாலங்களில் வெற்றி காண முடியாது என்று ஏற்கனவே விமர்சனங்கள் இருந்தன. அது இப்போட்டியின் முதல் நாளில் நிரூபணமான நிலையில் கடைசி வரை அதே அணுகுமுறையுடன் இப்போட்டியிலும் இங்கிலாந்து வென்று காட்டுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement