இது இந்திய அணியே இல்ல, யாருமே நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் விளையாடல – மதன் லால் வேதனையுடன் விமர்சித்தது என்ன

Madan Lal INDIA
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வேலைகளை துவங்கியுள்ளது. அந்த பயணத்தின் முதல் படியாக சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடரில் மோசமான பந்து வீச்சால் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக கத்துக்குட்டி வங்கதேசத்துக்கு எதிராக கொஞ்சமும் முன்னேறாமல் அதை விட மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது.

குறிப்பாக முதல் போட்டியில் 9 விக்கெட்களை எடுத்ததால் அஜாக்கிரதையாக செயல்பட்ட பவுலர்கள் 2வது போட்டியிலும் 6 விக்கெட் எடுத்த மிதப்பில் மெகதி ஹசன் போன்ற லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் வெற்றியை தட்டிப் பறிக்கும் அளவுக்கு மோசமாக செயல்பட்டது இந்திய ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. இத்தனைக்கும் வங்கதேசத்தை விட உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டை இந்திய அணி சமீபத்திய ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் சந்தித்த தோல்விகளில் எந்த பாடங்களையும் கற்காமல் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து வருகிறது. இதனால் நிச்சயமாக 2023 உலக கோப்பையை சொந்த மண்ணில் கூட இந்தியா வெல்லப்போவதில்லை என ரசிகர்கள் இப்போதே கவலையடைந்துள்ளனர்.

- Advertisement -

அர்ப்பணிப்பு இல்ல:

அதை விட ஐபிஎல் தொடரில் 2 மாதங்களில் கொடுக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்காக உயிரைக் கொடுத்து விளையாடும் இந்திய வீரர்கள் நாட்டுக்காக தடவலாக செயல்படுவதும், பணிச்சுமை என்ற பெயரில் ஓய்வெடுப்பதும், முக்கிய நேரத்தில் காயமடைந்து வெளியேறுவதையும் வழக்கமாக வைத்திருப்பது இந்திய ரசிகர்களையும் சில முன்னாள் வீரர்களையும் எரிமலையாக கொந்தளிக்க வைத்து வருகிறது. அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் வீரர் மதன் லால் நாட்டுக்காக விளையாடுவதை கௌரவமாகவும் உயிராகவும் நினைத்து இப்போதைய வீரர்கள் விளையாடுவதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.

INDia

போதாக்குறைக்கு அணி நிர்வாகமும் மாற்றங்கள் என்ற பெயரில் அதிகப்படியான சோதனைகளை தினம்தோறும் செய்து வருவதாக விமர்சிக்கும் அவர் தற்போதைய இந்திய அணி தாம் அறிந்த உண்மையான இந்திய அணியே கிடையாது என்று ஆதங்கமாக பேசியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நிச்சயமாக தற்போதைய இந்திய அணி சரியான பாதையில் நடக்கவில்லை. குறிப்பாக வெற்றி பெற வேண்டும் என முன்பிருந்த தீவிரமான எண்ணம் தற்போதைய அணியில் பார்க்க முடியவில்லை. கடந்த 2 வருடங்களாக இந்திய அணிகள் வெறித்தனம் இல்லை. சொல்லப்போனால் அவர்களை பார்க்கும் போது இந்திய அணியாகவே தோன்றவில்லை”

- Advertisement -

“அவர்களிடம் நாட்டுக்காக விளையாடுகிறோம் என்ற கௌரவம் மற்றும் அர்ப்பணிப்பு காணப்படவில்லை. அவர்கள் அதிக சோம்பலாக அல்லது வந்துவிட்டோம் பெயருக்காக விளையாடி விட்டு செல்வோம் என்ற வகையில் காட்சியளிக்கிறார்கள். இது மிகப்பெரிய கவலைக்குரிய விஷயமாகும். உங்களுக்கு வேண்டுமென்றால் ஐபிஎல் தொடரில் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நாட்டுக்காக முன்னுரிமை கொடுங்கள். அத்துடன் நீங்கள் ஐசிசி கோப்பைகளை வெல்லாமல் போனால் நமது தேசத்தின் கிரிக்கெட் வீழ்ச்சியை சந்தித்து விடும்” என்று கூறினார்.

Madan Lal

மேலும் சமீப காலங்களாகவே சீனியர் வீரர்கள் நட்சத்திர அந்தஸ்தை வைத்து இளம் வீரர்களை புறக்கணிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆனால் அவர்களோ 10க்கு ஓரிரு போட்டிகளில் மட்டும் அடித்து விட்டு எஞ்சிய போட்டிகளில் சுமாராக செயல்பட்டு இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைகிறார்கள். அதை விமர்சிக்கும் மதன் லால் இங்கிலாந்து போல இந்தியாவும் வெவ்வேறு வகையான கிரிக்கெட்டுக்கு சரியான வீரர்களை தேர்வு செய்யும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று பேசியது பின்வருமாறு.

“கடந்த 3 வருடங்களில் டாப் ஆர்டரில் விளையாடும் சீனியர் வீரர்கள் எத்தனை சதங்களை அடித்துள்ளார்கள்? கடந்த வருடம் எத்தனை சதங்கள் அடித்துள்ளார்கள்? பொதுவாக வயதாகும் போது அனைவருக்கும் பார்வைத்திறன் குறைவது வழக்கமாகும். அதே போல் நமது அணியின் பந்து வீச்சு ஒரு விக்கெட்டை எடுக்க முடியாத அளவுக்கு திடீரென்று பலவீனம் ஆகிவிட்டது. 69/6 என இருந்த வங்கதேசம் 271 ரன்கள் அடிக்கும் அளவுக்கு அணிக்குள் என்ன நடக்கிறது? அனைத்து நாடுகளிலும் அந்தந்த கிரிக்கெட்டுக்கு தேவையான வீரர்கள் மட்டுமே விளையாடுகிறார்கள். அதனால் நமது அணியிலும் ஏன் வெவ்வேறு கிரிக்கெட்டுக்கு வெவ்வேறு வீரர்களை பயன்படுத்தக் கூடாது? அனைத்து நாடுகளும் அதைப் பின்பற்றும் போது இந்தியாவும் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

Advertisement