பாகிஸ்தானை தெறிக்க விட்ட இங்கிலாந்து – கிரிக்கெட் வரலாற்றில் வெ.இ, இந்தியா படைக்காத ப்ரம்மாண்ட உலக சாதனை இதோ

England T20 World Cup
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை கடந்த அக்டோபர் 26ம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ஆரம்பத்திலேயே வெற்றிகரமான வெஸ்ட் இண்டீஸ் வெளியேறிய நிலையில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் நடையை கட்டியதைப் போல நம்பர் ஒன் இந்தியாவும் செமி ஃபைனலுடன் வெளியேறியது. ஆனால் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா தோற்று வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்து பைனலுக்கு தகுதி பெற்றது.

மறுபுறம் கத்துக்குட்டி அயர்லாந்திடம் தோற்றதை தவிர்த்து பெரும்பாலும் வெற்றி நடை போட்ட இங்கிலாந்து செமி ஃபைனலில் இந்தியாவை அடித்து நொறுக்கி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அந்த நிலையில் நவம்பர் 13ஆம் தேதியன்று உலகப் புகழ் பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு 137/8 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு முகமது ரிஸ்வான் 15, பாபர் அசாம் 32, முகமத் ஹாரீஸ் 8, இக்திகார் அகமது 0, சடாப் கான் 20 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக ஷான் மசூத் 38 (28) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

புதிய வரலாறு:
அந்தளவுக்கு தரமாக பந்து வீசிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சாம் கரண் 3 விக்கெட்டுகளையும் அடில் ரஷீத் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 138 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் 1, பிலிப் சால்ட் 10 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே அவுட்டான நிலையில் கேப்டன் ஜோஸ் பட்லரும் அதிரடியாக 26 (17) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

போதாக்குறைக்கு லோயர் ஆர்டரில் ஹரி ப்ரூக் 20, மொயின் அலி 19 என முக்கிய வீரர்கள் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற 2019 உலகக்கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸ் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 52* (49) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார். அதனால் 19 ஓவரிலேயே 138/5 ரன்களை எடுத்த இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்று டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் 1992 போல மீண்டும் மேஜிக் செய்வோம் என்று வாய் சவடால் விட்ட பாகிஸ்தான் பேட்டிங்கில் 150 ரன்கள் எடுக்கத் தவறியதால் பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

1. அந்த அணி இப்போட்டியில் பந்து வீச்சில் தீயாகப் போராடினாலும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் அசத்திய இங்கிலாந்து 2010க்குப்பின் 2வது டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

2. அதனால் டி20 உலக கோப்பைகளில் 2 சாம்பியன் பட்டங்களை வென்ற அணி என்ற வெஸ்ட் இண்டீசின் (2012, 2016) சாதனையையும் சமன் செய்த இங்கிலாந்து வெற்றிகரமான அணி என்ற பெருமையும் பகிர்ந்து கொண்டுள்ளது.

3. அதை விட 2019இல் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று தற்சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட்டின் சாம்பியனாக திகழும் அந்த அணி தற்போது 20 ஓவர் உலக கோப்பையையும் வென்றுள்ளது. இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நேரத்தில் 20 ஓவர், 50 ஓவர் ஆகிய 2 ஐசிசி உலகக் கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற வரலாற்றை இங்கிலாந்து படைத்துள்ளது. அதாவது டி20 சாம்பியன் 50 ஓவர் சாம்பியன் ஆகிய 2 அந்தஸ்தையும் ஒரே நேரத்தில் பெற்றுள்ள முதல் அணியாக இங்கிலாந்து புதிய வரலாறு படைத்துள்ளது.

4. இதற்கு முன் 60 ஓவர், 50 ஓவர், 20 ஓவர் ஆகிய 3 விதமான உலக கோப்பைகளையும் வென்ற இந்தியா கூட இப்படி ஒரு சாதனையை படைத்ததில்லை. அதே போல் 60 ஓவர், 20 ஓவர் உலகக் கோப்பைகளை வென்ற வெஸ்ட் இண்டீசும் இது போன்ற சாதனையை படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement