அதிரடியால் சரித்திரம் படைத்த இங்கிலாந்து, 3 மாதங்களாக ஹாட்ரிக் அடி வாங்கிய பாகிஸ்தான் 63 வருட மோசமான சாதனை

- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து 17 வருடங்கள் கழித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்ற இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அதிரடியான அணுகு முறையால் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இங்கிலாந்து 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பை வென்றது. மறுபுறம் சொந்த மண்ணில் மண்ணை கவ்விய பாகிஸ்தான் குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டிசம்பர் 17ஆம் தேதியன்று கராச்சியில் துவங்கிய சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஆனால் பாபர் அசாம் 78, ஆஹா சல்மான் 56, அசார் அலி 45 என ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் அந்த அணியை 304 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜாக் லீச் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 0, ஜோ ரூட் 0, கேப்டன் ஸ்டோக்ஸ் 26 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் ஓலி போப் 51 ரன்களும் இளம் வீரர் ஹரி ப்ரூக் ஹாட்ரிக் சதமடித்து 111 ரன்களும் பென் போக்ஸ் 64 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

சரித்திர வெற்றி:
அதை விட மார்க் வுட் 35, ஓலி ராபின்சன் 29 என டெயில் எண்டர்கள் முக்கிய ரன்களை சேர்த்ததால் தப்பிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 354 ரன்கள் குவித்து 50 ரன்கள் முன்னிலையும் பெற்றது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது மற்றும் நவ்மன் அலி தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அந்த நிலையில் பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டிய அந்த அணி பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இளம் இங்கிலாந்து வீரர் ரெஹன் அஹமதின் மாயாஜால சுழலில் வெறும் 216 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 54 ரன்களும் சாகில் 53 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக 5 விக்கெட்களை எடுத்த ரெஹன் அஹமத் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் 5 விக்கெட் ஹால் எடுத்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். இறுதியில் 167 என்ற சுலபமான இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 41 ரன்கள் எடுத்ததால் 3வது நாளிலேயே இலக்கை நெருங்கியது. அந்த நிலைமையில் இன்று துவங்கிய 4வது நாளில் வெறும் 55 ரன்கள் தேவைப்பட்ட அந்த அணிக்கு தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த பென் டன்கட் 82* (78) ரன்களும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 35* (43) ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

அதனால் 170/2 ரன்களை எடுத்த இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 – 0 (3) என்ற கணக்கில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து இத்தொடரின் கோப்பையை முத்தமிட்டது. அத்துடன் 2000ஆம் ஆண்டுக்குப்பின் 22 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வைட் வாஷ் செய்த முதல் அணி என்ற சரித்திர சாதனையும் படைத்தது. இதற்கு முன் வரலாற்றில் வேறு எந்த அணியும் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் வைட் வாஷ் செய்தது கிடையாது.

இதை என்ன ஆனாலும் அதிரடியை கைவிட மாட்டோம் என்று அணுகுமுறையை பின்பற்றி சாதித்து காட்டிய பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது தலைமையிலான இங்கிலாந்து உலக அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. மறுபுறம் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 வருடங்கள் கழித்து நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 1 – 0 (3) என்ற கணக்கில் தோற்ற பாகிஸ்தான் இந்த தோல்விகளையும் சேர்த்து வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர்ச்சியான போட்டிகளில் தோல்வியை சந்தித்து தலை குனிந்துள்ளது.

இதையும் படிங்க: IPL 2023 : அவரு நம்ம டீமுக்கு ரொம்ப முக்கியம். அவரை வாங்கியே ஆகனும் – ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட தோனி

இதற்கு முன் கடந்த 1959ஆம் ஆண்டு 3 தொடர் போட்டிகளில் தோற்றதே முந்தைய சாதனையாகும். அத்துடன் கடந்த நவம்பர் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் 4 – 3 (7) என்ற கணக்கில் இங்கிலாந்திடம் மண்ணை கவ்விய பாகிஸ்தான் ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் அவர்களிடமே பைனலில் தோற்றது. தற்போது மீண்டும் சொந்த மண்ணில் தோற்ற அந்த அணி கடந்த 3 மாதங்களில் இங்கிலாந்திடம் ஹாட்ரிக் அடி வாங்கியுள்ளதால் உலக அளவில் விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்துள்ளது.

Advertisement