1992 ஸ்க்ரிப்ட்டை அடித்து நொறுக்கி 30 வருடங்கள் கழித்து பாகிஸ்தானை பழி தீர்த்த இங்கிலாந்து – சாம்பியனானது எப்படி

PAK vs ENG
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. முதல் நாளிலிருந்தே எதிர்பாராத திருப்பங்களை விருந்து படைத்த இத்தொடரில் வெற்றிகரமான வெஸ்ட் இண்டீஸ், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் உலகின் நம்பர் ஒன் இந்தியா ஆகிய அணிகள் படிப்படியாக வெளியேறிய நிலையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் ஃபைனலுக்கு தகுதி பெற்றன. இதில் ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் தோற்றதால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேரத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்று வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்தது.

அதை விட 1992இல் இதே ஆஸ்திரேலிய மண்ணில் இதே போல இம்ரான் கான் தலைமையில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் இறுதியில் இங்கிலாந்தை தோற்கடித்து பாகிஸ்தான் கோப்பை வென்ற மேஜிக் இம்முறையும் நிகழும் என அந்நாட்டவர்கள் உறுதியாக நம்பினார்கள். அந்த நிலையில் நவம்பர் 13 ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய மாபெரும் பைனலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 15 (14) ரன்களில் அவுட்டானதால் அடுத்து வந்த முகமது ஹாரிஸ் தடுமாறி 8 (12) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

பலிக்காத ஸ்கிரிப்ட்:
அந்த நிலைமையில் மறுபுறம் தடுமாறிய கேப்டன் பாபர் அசாம் 2 பவுண்டரியுடன் 32 (28) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த இப்திகார் அகமது டக் அவுட்டாகி ஏமாற்றினார். அடுத்த சில ஓவர்களில் அதிரடி காட்ட முயன்ற ஷான் மசூட் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 38 (28) ரன்களிலும் சடாப் கான் 20 (14) ரன்களிலும் சாம் கரனிடம் ஆட்டமிழந்தனர். இறுதியில் முகமது நவாஸ் 5, முகமது வாசிம் 4 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 20 ஓவரில் பாகிஸ்தான் போராடி 137/8 ரன்கள் சேர்த்தது.

அந்தளவுக்கு முதல் ஓவரிலிருந்தே கட்டுக்கோப்பாக பந்து வீசிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சாம் காரன் 3 விக்கெட்டுகளையும் அடில் ரசித் மற்றும் கிறிஸ் ஜோர்டான் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர் அதன்பின் 138 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு முதல் ஓவரிலேயே ஷாஹீன் அப்ரிடியிடம் அலெஸ் ஹேல்ஸ் 1 (2) ரன்னில் போல்டான நிலையில் அடுத்து வந்த பிலிப்ஸ் சால்ட் 2 பவுண்டரியுடன் அடுத்த சில ஓவர்களில் 10 (9) ரன்களில் நடையை காட்டினார். இருப்பினும் மறுபுறம் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் அதிரடி காட்டிய கேப்டன் ஜோஸ் பட்லர் நம்பிக்கை கொடுத்தாலும் பவர் பிளே முடிவில் 26 (17) ரன்களில் ஆட்டமிழந்ததால் போட்டியில் திருப்பம் ஏற்பட்டது.

- Advertisement -

அதனால் 45/3 என்ற தடுமாற்றமான தொடக்கத்தை பெற்றாலும் துவளாமல் போராடிய இங்கிலாந்தின் வெற்றிக்கு போராடிய ஹரி புரூக் 20 (23) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் நங்கூரமாகநின்ற நம்பிக்கை நாயகன் பென் ஸ்டோக்ஸ் வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். அவருக்கு உறுதுணையாக 3 பவுண்டரியுடன் அதிரடியாக 19 (13) ரன்கள் குவித்த மொய்ன் அலி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் அசராத 2019 உலகக்கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸ் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 52* (49) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்ததால் 19 ஓவரிலேயே 138/5 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இரு அணிகளுமே சரிக்கு சமமாக மோதிய நிலையில் பேட்டிங்கில் பாகிஸ்தான் 150 ரன்கள் கூட எடுக்காதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் தங்களுடைய பலமான பந்து வீச்சில் முதல் ஓவரிலிருந்தே பாகிஸ்தான் பவுலர்கள் தீயாக செயல்பட்டாலும் கட்டுப்படுத்துவதற்கு ரன்கள் குறைவாக இருந்ததால் எவ்வளவோ போராடியும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.

மறுபுறம் டாஸ் வென்று பந்து வீச்சில் பாகிஸ்தானை 150 ரன்கள் கூட எடுக்க விடாத இங்கிலாந்து குறைவான இலக்கை பயன்படுத்தி பேட்டிங்கில் சவாலான பந்து வீச்சையும் சமாளித்து 2010க்குப்பின் 11 வருடங்கள் கழித்து 2வது டி20 உலக கோப்பையை வென்று டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. அதனால் 1992 உலக கோப்பை போல வெல்வோம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த ஸ்கிரிப்ட்டை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து 30 வருடங்கள் கழித்து அதே மெல்போர்ன் மைதானத்தில் 1992 உலகக்கோப்பை தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது.

Advertisement