PAK vs ENG : டெஸ்டில் டி20யை மிஞ்சிய த்ரில்லர் – பரபரப்பான போட்டியில் 22 வருட சரித்திர தொடரை வென்றது யார்? முழு விவரம் இதோ

PAK vs ENG
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தான் மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்திடம் சொந்த மண்ணில் சரமாரியாக அடி வாங்கி தோற்ற பாகிஸ்தான் கோப்பையை வெல்ல டிசம்பர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. முல்தான் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இம்முறை சுழலுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் 281 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக பென் டன்கட் 63 ரன்களும் ஓலி போப் 60 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அறிமுக போட்டியில் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 75 ரன்களும் ஷாகீல் 63 ரன்களும் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 142/2 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அவர்கள் அவுட்டானதும் அடுத்த வந்த முகமது ரிஸ்வான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் பாகிஸ்தானை 202 ரன்களுக்கு சுருட்டி அசத்திய இங்கிலாந்தின் சார்பில் அதிகபட்சமாக ஜாக் லீச் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

பரபரப்பான போட்டி:
அதன் பின் 79 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்துக்கு ஜோ ரூட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் ஹாரி ப்ரூக் சதமடித்து 108 ரன்களும் பென் டன்கட் 79 ரன்களும் எடுத்ததால் 275 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் மீண்டும் அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியாக 355 ரன்களை சேசிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தானுக்கு 66 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அசாத் சபிக் 45 ரன்களும் முகமத் ரிஸ்வான் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் பாபர் அசாம் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த இமாம்-உல்-ஹக் 60 ரன்கள் எடுத்து 4வது நாள் முடிவில் அவுட்டானார். அதனால் இன்று துவங்கிய கடைசி பாகிஸ்தானின் வெற்றிக்கு 154 ரன்களும் இங்கிலாந்தின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும் தேவைப்பட்ட நிலையில் ஆரம்பத்திலேயே அஸ்ரப் 10 ரன்களில் நடையை கட்டினார். ஆனால் மறுபுறம் 4வது நாளிலிருந்தே இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக நின்ற சவுத் ஷாகீல் மீண்டும் முகமது நவாஸ் உடன் இணைந்து நங்கூரமாக 5வது நாளில் வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

6வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியால் பாகிஸ்தான் வெற்றி பாதைக்கு வந்த போது முகமது நவாஸ் 45 ரன்களிலும் ஷாகீல் 94 ரன்கள் எடுத்திருந்த போது சர்ச்சைக்குரிய கேட்ச் முறையில் அவுட்டாகி சென்றார். அதனால் போட்டியில் மேலும் பரபரப்பு ஏற்பட்ட போது உணவு இடைவெளியில் இங்கிலாந்துக்கு 3 விக்கெட்டுகளும் பாகிஸ்தானுக்கு 64 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஒருபுறம் ஆஹா சல்மான் நங்கூரமாக நின்று 20*ரன்கள் எடுக்க எதிர்ப்புறம் அப்ரார் அஹ்மத் போராடி 17 ரன்களில் அவுட்டானார்.

அதை பயன்படுத்திய இங்கிலாந்து டெயில் எண்டர்கள் ஜாஹிட் முகமத் மற்றும் முகமத் அலியை தொல்லை செய்ய விடாமல் டக் அவுட் செய்து பாகிஸ்தானை 328 ரன்களுக்கு சுருட்டி 26 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார். டி20 போட்டிக்கு நிகராக பரபரப்பு நிலவிய இப்போட்டி நடைபெற்ற முல்தான் கிரிக்கெட் மைதானம் சுழலுக்கு சாதகமாகவே இருந்தாலும் ஆரம்ப முதலே இங்கிலாந்து மீண்டும் அதே அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடியதே வெற்றியை கொடுத்தது.

- Advertisement -

மறுபுறம் முதல் இன்னிங்சில் 142/2 – 202க்கு ஆல் அவுட்டான தருணத்துடன் எப்போதுமே வெற்றிக்கு அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணமின்றி பழைய பஞ்சாங்கத்தை பின்பற்றி தடவலாக பேட்டிங் செய்ததே பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த வெற்றியால் 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ள இங்கிலாந்து 22 வருடங்களுக்குப் பின் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்துள்ளது.

இதையும் படிங்க: ஏற்கனவே நாம 2 வருஷம் பின்னாடி போய்ட்டோம், 350 ரன்கள் அடிக்கனும்னா அவரை கழற்றி விடுங்க – சபா கரீம் அதிரடி

கடைசியாக கடந்த 2000ஆம் ஆண்டு நாசர் ஹுசேன் தலைமையில் 1 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றிருந்தது. மறுபுறம் இந்த தோல்வியால் சொந்த மண்ணில் மண்ணை கவ்விய பாகிஸ்தான் விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது.

Advertisement