
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜூன் 14ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு ஆன்ட்டிகுவா நகரில் 28வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஓமன் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஓமன் ஆரம்பம் முதலே திணறலாக பேட்டிங் செய்தது.
அந்த வகையில் மிகவும் திண்டாட்டமாக விளையாடிய அந்த அணி 13.2 ஓவரில் வெறும் 47 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு யாருமே 15 ரன்கள் கூட தாண்டாத நிலையில் அதிகபட்சமாக சோயப் கான் 11 ரன்கள் எடுத்தார். மறுபுறம் பந்து வீச்சில் நெருப்பாக செயல்பட்ட இங்கிலாந்து சார்பில் அடில் ரசித் 4, மார்க் வுட் 3, ஜோப்ரா ஆர்ச்சர் 3 எடுத்தனர்.
மாஸ் வெற்றி:
அதைத் தொடர்ந்து 48 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு பிலிப் சால்ட் 3 பந்தில் 12 ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினாலும் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக 24* (8) ரன்கள் எடுத்தார். அவருடன் ஜானி பேர்ஸ்டோ 8* (2) ரன்கள் எடுத்ததால் 3.1 ஓவரில் 50/2 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
அந்த வகையில் இப்போட்டியில் 101 பந்துகளை மீதம் வைத்து இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் டி20 உலகக் கோப்பையிலும் 100+ பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்ற பிரம்மாண்ட உலக சாதனையை இங்கிலாந்து படைத்தது. அத்துடன் டி20 உலகக் கோப்பையில் அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்ற மற்றுமொரு உலக சாதனையை இங்கிலாந்து நிகழ்த்தியது.
இதற்கு முன் 2014 டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை அணி 90 பந்துகள் மீதம் வைத்து வென்றதே முந்தைய சாதனையாகும். இந்த பிரம்மாண்ட வெற்றியால் -1.80 என்ற மோசமான ரன் ரேட்டை கொண்டிருந்த இங்கிலாந்து தற்போது +3.80 என்ற அசத்தலான ரன்ரேட் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: காசு கொடுத்து பாராட்ட வைக்கும் இவங்களையா பும்ரா, கோலியுடன் கம்பேர் பண்றிங்க.. சல்மான் பட் விளாசல்
இதனால் 3 போட்டிகளில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து பி பிரிவின் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியா அதனுடைய கடைசி போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்த வேண்டும். அதே போல இங்கிலாந்து தங்களுடைய கடைசி போட்டியில் கொஞ்சம் பெரிய வெற்றியை பெற வேண்டும். அப்படி நடந்தால் இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.