IND vs ENG : குறைவான ஸ்கோரை அடிக்கவிடாமல் மடக்கிய இங்கிலாந்து மெகா பதிலடி வெற்றி, இந்தியா சரிந்தது எப்படி – முழுவிவரம்

IND vs ENG Reece Toply Virat Kohli
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் அற்புதமான பந்துவீச்சால் 110 ரன்களுக்கு சுருட்டி பின்னர் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று அசத்தியது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2-வது போட்டி ஜூலை 14-ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.

அப்போட்டியில் விராட் கோலி காயத்திலிருந்து குணமடைந்த நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. கடந்த போட்டியில் மளமளவென விக்கெட்டுகளை தாரைவார்த்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இம்முறை ஆரம்பம் முதலே நிதானத்தை காட்டினர். ஆனால் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 23 (33) ரன்கள் எடுத்திருந்தபோது பாண்டியாவின் பந்துவீச்சில் ஜேசன் ராய் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் மற்றொரு தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 6 பவுண்டரியுடன் 38 (38) ரன்களில் சஹாலின் சுழலில் கிளீன் போல்டானார்.

- Advertisement -

அசத்திய பவுலர்கள்:
அதனால் 72/2 என்ற சுமாரான தொடக்கத்தைப் பெற்ற இங்கிலாந்துக்கு அடுத்ததாக ஜோடி சேர முயன்ற ஜோ ரூட் 11 (21) ரன்களிலும் கேப்டன் ஜோஸ் பட்லர் 4 (5) ரன்களிலும் அடுத்தடுத்த இடைவெளியில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அந்த நிலைமையில் அதிரடி காட்ட முயன்ற லியம் லிவிங்ஸ்டன் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 32 (33) ரன்களிலும் பென் ஸ்டோக்ஸ் 3 பவுண்டரியுடன் 21 (23) ரன்களிலும் அவுட்டாகி மேலும் பின்னடைவை ஏற்படுத்தினர்.

அதனால் 148/6 என தடுமாறிய அந்த அணி 200 ரன்களை தாண்டுமா என எதிர்பார்க்கப்பட்டபோது ஜோடி சேர்ந்த டேவிட் வில்லி – மொய்ன் அலி ஆகியோர் பொறுப்புடன் 7-வது விக்கெட்டுக்கு முக்கியமான 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினர். அதில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் மொயின் அலி 47 (64) ரன்களிலும் டேவிட் வில்லி 2 பவுண்டரி 2 சிக்சருடன் 41 (49) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் அவுட்டானதால் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து 246 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்களும் பும்ரா மற்றும் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

- Advertisement -

திணறிய இந்தியா:
அதை தொடர்ந்து 247 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த ஷிகர் தவான் 9 (26) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். போதாகுறைக்கு அடுத்து வந்த ரிஷப் பண்ட் டக் அவுட்டான நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மீண்டும் 16 (25) ரன்களில் அவுட்டாகி கைவிட்டார். அதனால் 11.2 ஓவரில் 31/4 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவை காப்பாற்ற முயன்ற சூர்யகுமார் யாதவும் 27 (29) ரன்களில் அவுட்டானதால் 73/5 என மொத்தமாக சரிந்த இந்தியாவின் தோல்வியும் உறுதியானது.

அந்த நேரத்தில் ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் போட முயன்ற ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரியுடன் 29 (43) ரன்களில் ஆட்டமிழந்ததால் மேலும் தடுமாறிய இந்தியாவுக்கு கடைசியில் முகமது சமி 23 (28) ரன்களில் அவுட்டானார். இறுதியில் ஜடேஜாவும் போராடி 29 (44) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் கடைசியில் வந்த பேட்ஸ்மேன்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 146 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து சார்பில் அபாரமாக பந்து வீசிய ரீஸ் டாப்லி அதிகபட்சமாக 6 விக்கெட்களை எடுத்து இந்தியாவின் கதையை முடித்தார்.

- Advertisement -

சறுக்கிய இந்தியா:
அதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து முதல் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா மிகச் சிறப்பாக பந்துவீசி ராய், ஸ்டோக்ஸ், ரூட், பட்லர் என முக்கிய பேட்ஸ்மேன்களை மீண்டும் சொற்ப ரன்களில் அவுட் செய்து அசத்தியது. ஆனால் லோயர் மிடில் ஆர்டரில் மொய்ன் அலி – டேவிட் வில்லியை விரைவில் காலி செய்யத் தவறிய இந்திய பவுலர்கள் முக்கியமான 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க விட்டது லேசான பின்னடைவை கொடுத்தது.

மேலும் முதல் இன்னிங்சில் லார்ட்ஸ் மைதான பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததை தெரிந்த இந்திய பேட்ஸ்மேன்களில் கடந்த போட்டியில் 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஹித் சர்மா – தவான் ஜோடி இம்முறை 10 ரன்களை கூட பார்ட்னர்ஷிப் அமைக்காமல் ஆரம்பத்திலேயே கைவிட்டது.

போதாகுறைக்கு விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா என அனைவரையுமே கொஞ்ச நேரம் கூட களத்தில் நின்று செட்டிலாகி பெரிய ரன்களை எடுக்க விடாமல் இங்கிலாந்து பவுலர்கள் அவுட் செய்தனர். அதனால் ரன்ரேட்டை கட்டுக்குள் வைக்க தவறிய இந்தியா விக்கெட்டையும் சீரான இடைவெளிகளில் கோட்டைவிட்டு வெற்றியையும் தவறவிட்டது. அந்த அளவுக்கு அற்புதமாக பந்துவீசிய இங்கிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து வாழ்வா – சாவா போட்டியில் வாழ்வை கண்டுள்ளது.

Advertisement