
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழையால் 39 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 39 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 312-5 ரன்கள் குவித்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக பென் டக்கெட் 63, கேப்டன் ஹரி ப்ரூக் 87 (58), லியாம் லிவிங்ஸ்டன் 62* (27), ஜேமி ஸ்மித் 39 (28) ரன்கள் குவித்து அசத்தினார்கள். குறிப்பாக மிட்சேல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் 6, 0, 6, 6, 6, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்க விட்ட லிவிங்ஸ்டன் 28 ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.
மேலும் 25 பந்துகளில் 50 ரன்கள் அடித்த லிவிங்ஸ்டன் கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மறுபுறம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் வழங்கிய ஆஸ்திரேலிய வீரர் என்ற மோசமான சாதனையை ஸ்டார்க் படைத்தார். இதற்கு முன் ஆடம் ஜாம்பா, கேமரூன் கிரீன், சேவியர் டோகர்டி, சைமன் டேவிஸ், கிரைக் மெக்டெர்மோட் தலா 26 ரன்கள் வழங்கியதே முந்தைய சாதனையாகும்.
அதே போல 39 ஓவர்களிலேயே 312 ரன்கள் குவித்த இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. அந்தளவுக்கு சுமாராகவே பந்து வீசிய ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 313 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு துவக்க வீரர்கள் மார்ஷ் 28, டிராவிஸ் ஹெட் 34 ரன்களில் அவுட்டானார்கள்.
மிடில் ஆர்டரில் ஸ்மித் 5, ஜோஸ் இங்லிஷ் 8, மார்னஸ் லபுஸ்ஷேன் 4, அலெக்ஸ் கேரி 13, மேக்ஸ்வெல் 2 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். இறுதியில் 24.4 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை 126 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மேத்தியூ போட்ஸ் 4, பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதையும் படிங்க: அப்போ தான் கெளதம் கம்பீரின் உண்மையான கேரக்டர் இந்திய ரசிகர்களுக்கு தெரியும்.. தமீம் இக்பால் பேட்டி
அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து சாதனையும் படைத்தது. மறுபுறம் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்துள்ளது. மொத்தத்தில் முதலிரண்டு போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த 2 போட்டிகளில் வென்று பதிலடி கொடுத்துள்ள இங்கிலாந்து 2 – 2* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.