
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதனுடைய முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள செப்டம்பர் 24ஆம் தேதி செஸ்டர்-லே-ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் இங்கிலாந்து கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு மேத்தியூ ஷார்ட் 14, கேப்டன் மார்ஷ் 24 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் மிடில் ஆர்டரில் ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக விளையாடி அரை சதமடித்து 60 (82) ரன்களும் கேமரூன் கிரீன் 42 ரன்களும் குவித்தனர்.
அதே போல மார்னஸ் லபுஸ்ஷேன் டக் அவுட்டானலும் அலெக்ஸ் கேரி அதிரடியாக விளையாடி 77* (65), மேக்ஸ்வெல் 30 (25), ஆரோன் ஹார்டி 44 (26) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்கள். அதனால் 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 304-7 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து 305 ரன்களை சேசிங் செய்த இங்கிலாந்துக்கு துவக்க வீரர்கள் பென் டக்கெட் 8, பிலிப் சால்ட் 0 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 11-2 என தடுமாறிய இங்கிலாந்துக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஹாரி ப்ரூக் மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோர் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு அபாரமாக பேட்டிங் செய்த அந்த ஜோடி ஆஸ்திரேலிய பவுலர்களை அட்டகாசமாக எதிர்கொண்டு 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது.
அதில் வில் ஜேக்ஸ் அரை சதமடித்து 84 (82) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஜேமி ஸ்மித் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹரி ப்ரூக் சதமடித்து 13 பவுண்டரி 2 சிக்ஸருடன் 110* (94) ரன்கள் குவித்தார். அவருடன் அடுத்து வந்த லிவிங்ஸ்டன் அதிரடியாக 33* (20) ரன்கள் எடுத்ததால் 37.4 ஓவரில் இங்கிலாந்து 254-4 ரன்கள் எடுத்த போது மழை வந்தது.
அப்போது மழை தொடர்ந்து பெய்ததால் டிஎல்எஸ் விதிமுறைப்படி இங்கிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வென்ற அணியாக மிரட்டி வந்த ஆஸ்திரேலியாவின் 2வது உலக சாதனையை இங்கிலாந்து உடைத்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் முதல் செப்டம்பர் 2024 வரை கடைசியாக விளையாடிய 14 போட்டிகளில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக வென்றது.
இதையும் படிங்க:
அந்த சாதனை தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. 2003 ஜனவரி – 2003 மே காலகட்டங்களில் தொடர்ச்சியாக 21 வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா முதல் உலக சாதனையும் தங்கள் வசம் வைத்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேமரூன் கிரீன், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. மறுபுறம் வாழ்வா – சாவா போட்டியில் வென்ற இங்கிலாந்து இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.