87 ரன்ஸ்.. 5 விக்கெட்.. மேத்தியூ ஷார்ட் மேஜிக்கை உடைத்த லிவிங்ஸ்டன்.. ஆஸிக்கு இங்கிலாந்து பதிலடி

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் 2வது போட்டி செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஃகார்டிப் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு 52 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான துவக்கத்தை கொடுத்த கேப்டன் டிராவிஸ் ஹெட் 31 (14) ரன்களில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடிய மேத்தியூ ஷார்ட் 28 (24) ரன்களில் பெவலியன் திரும்பினார். அதைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜேக் பிரேசர்-மெக்குர்க் அரை சதமடித்து 50 (31) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

ஆல் ரவுண்டராக லிவிங்ஸ்டன்:

அவருடன் சேர்ந்து விளையாடிய ஜோஸ் இங்லீஷ் தம்முடைய பங்கிற்கு அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 42 (26) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2, டிம் டேவிட் 1 ரன்களில் அவுட்டானாலும் கேமரூன் கிரீன் 13* (8), ஆரோன் ஹார்டி 20* (9) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் ஆஸ்திரேலியா 193-6 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 2, பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து 194 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு தடுமாற்றமாக விளையாடிய வில் ஜேக்ஸ் 12 (10) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த ஜோர்டான் கோக்ஸ் டக் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் பிலிப்ஸ் சால்ட்டை 39 (23) ரன்களில் மேத்தியூ ஷார்ட் காலி செய்தார்.

- Advertisement -

5 விக்கெட்ஸ் வீண்:

ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த லியம் லிவிங்ஸ்டன் – ஜேகப் பேத்தல் ஆகியோர் மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக எதிர்கொண்டனர். அந்த வகையில் 4வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்த அந்த ஜோடியில் ஜேகப் பேத்தல் 44 (24) ரன்களில் அவுட்டானார். அவரை அவுட்டாக்கிய மேத்தியூ ஷார்ட் அடுத்து வந்த சாம் கரணை 1 ரன்னில் அவுட்டாக்கினார்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் அரை சதமடித்து 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 87 (47) ரன்களை விளாசி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். அப்போது தம்முடைய அடுத்த ஓவரில் அவரையும் அவுட்டாக்கிய மேத்தியூ ஷார்ட் அடுத்ததாக வந்த பிரைடான் கார்ஸை டக் அவுட்டாக்கி 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையும் படிங்க: அதை செய்யாததால் வங்கதேச ஸ்பின்னர்களிடம் நம்பர் ஒன் விராட் கோலி தடுமாறலாம்.. பத்ரிநாத் பேட்டி

ஆனால் அடுத்து வந்த ஜெமி ஓவர்டன் 4* (4) ரன்கள் எடுத்ததால் 19 ஓவரிலேயே 194-7 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்கு ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த அந்த அணி 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. மறுபுறம் மேத்தியூ ஷார்ட் 5, சீன் அபோட் 2 விக்கெட்டுகளை எடுத்தும் ஆஸ்திரேலியா தோற்றது.

Advertisement