Ashes 2023 : ஆஸியிடம் கை மீறிய வெற்றியை பறித்த இங்கிலாந்து – காற்றில் பறக்க ரெடியான மானத்தை காப்பாற்றியது எப்படி?

ENg vs AUS 5
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் கையிலிருந்த வெற்றிகளை கோட்டை விட்டு தலைகுனிந்த இங்கிலாந்து 3வது போட்டியில் வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தது. அதே போல சிறப்பாக செயல்பட்டு 4வது போட்டியில் கொண்டு வந்த இங்கிலாந்தின் வெற்றியை மழை தடுத்தது. அதனால் அப்போட்டி டிராவில் முடிந்த காரணத்தால் நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையை தக்க வைத்து அசத்தியது.

மறுபுறம் சொந்த மண்ணில் 22 வருடங்களாக ஆஷஸ் தொடரில் தோற்காத கௌரவத்தை காப்பாற்ற ஜூலை 27ஆம் தேதியில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய கடைசி போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 283 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 85 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடி 295 ரன்கள் குவித்து 12 ரன்கள் முன்னிலையாக பெற்றது.

- Advertisement -

இங்கிலாந்து வெற்றி:
அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 395 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 91, ஜாக் கிராவ்லி 73, ஜானி பேர்ஸ்டோ 78 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 384 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் – உஸ்மான் கவாஜா ஆகியோர் நங்கூரமாக நின்று ஆரம்பத்திலேயே இங்கிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 140 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அதனால் ஆஸ்திரேலியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் வார்னர் 60 ரன்களிலும் கவாஜா 71 ரன்களிலும் கிறிஸ் ஓக்ஸ் வேகத்தில் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அப்போது வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 169/3 என சரிந்த ஆஸ்திரேலியாவை 4வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்று 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் காப்பாற்ற போராடிய டிராவிஸ் ஹெட் 43 ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே ஸ்டீவ் ஸ்மித்தும் போராடி 54 ரன்களில் ஆட்டமிழந்தது போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது.

- Advertisement -

ஏனெனில் அடுத்த சில ஓவர்களில் மிட்சேல் மார்ஷ் 6 ரன்னில் மொய்ன் அலி சுழல் அவுட்டாக கிறிஸ் ஓக்ஸ் வேகத்தில் மிட்சேல் ஸ்டார்க் டக் அவுட்டாகி சென்றார். இருப்பினும் மறுபுறம் அலெக்ஸ் கேரி நங்கூரமாக போராடிய நிலையில் எதிர்ப்புறம் கேப்டன் பட் கமின்ஸ் 9, டோட் முர்ஃபி 18 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் ஏற்பட்ட மிகப்பெரிய அழுத்தத்தில் முடிந்தளவுக்கு போராடிய அலெக்ஸ் கேரியை 28 ரன்களில் தன்னுடைய கடைசி போட்டியில் அவுட்டாக்கிய ஸ்டுவர்ட் ப்ராட் இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.

அந்த வகையில் 334 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை ஆல் அவுட்டாக்கிய இங்கிலாந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. குறிப்பாக 140/0 என்ற மிகச் சிறப்பான துவக்கத்தை பெற்ற ஆஸ்திரேலியாவை மழை வந்த பின் தீயாகப் பந்து வீசி சுருட்டி வெற்றி பெற்ற அந்த அணிக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 4 விக்கெட்டுகளும் மொய்ன் அலி 3 விக்கெட்டுகளும் ஸ்டுவர்ட் ப்ராட் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

இதையும் படிங்க:IND vs WI : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அசாமின் மாபெரும் சாதனையை முறியடித்த – சுப்மன் கில்

அதன் காரணமாக 2 – 2 (5) என்ற கணக்கில் இந்த தொடரை சமன் மட்டுமே செய்த ஆஸ்திரேலியா கோப்பையை முழுமையாக வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. ஆனால் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் பின்னடைவுக்குள்ளான இங்கிலாந்து 2001க்குப்பின் முதல் முறையாக சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் சந்திக்க வேண்டிய தோல்வியின் விளிம்பு வரை சென்று மனம் தளராமல் போராடி 22 வருடங்களாக தக்க வைத்துள்ள கௌரவத்தையும் மானத்தையும் காப்பாற்றியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement