414 ரன்ஸ்.. இந்தியாவின் 2வது உலக சாதனையை சமன் செய்த இங்கிலாந்து.. பஸ்பால் ஸ்டைலில் தெ.ஆ’வுக்கு அடி

ENG vs RSA
- Advertisement -

தெனாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே கோப்பையைக் கைப்பற்றியது. அத்துடன் 1998க்குப்பின் 27 வருடங்கள் கழித்து இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்று தெனாப்பிரிக்கா சாதனை படைத்தது.

மறுபுறம் பஸ்பால் ஸ்டைலில் அதிரடியாக விளையாடுகிறோம் என்று சொல்லக்கூடிய இங்கிலாந்து சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்ததால் விமர்சனங்கள் எழுந்தன. அந்த சூழ்நிலையில் அத்தொடரின் சம்பிரதாய கடைசிப் போட்டி செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. சௌதம்டன் நகரில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

வெளுத்த இங்கிலாந்து:

அதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்துக்கு 59 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த பென் டக்கெட் 31 (33) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த நம்பிக்கை நாயகன் ஜோ ரூட் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். மறுபுறம் அதிரடி காட்டிய மற்றொரு துவக்க வீரர் ஜேமி ஸ்மித் அரை சதத்தை அடித்து 62 (49) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த ஜேக்கப் பெத்தல் அதிரடியாக விளையாடி தென்னாபிரிக்க பவுலர்களை புரட்டி எடுத்தார். ரூட்டை விட அதிரடி காட்டிய அவர் அரை சதத்தை அடித்து அசத்தினார். அவருடன் சேர்ந்து ரூட்டும் அரை சதத்தை அடித்தார். நேரம் செல்ல செல்ல மிகச் சிறப்பாக விளையாடிய அந்த ஜோடி 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது பிரிந்தது.

- Advertisement -

2வது உலக சாதனை:

அதில் ஜேக்கப் 13 பவுண்டரி 3 சிக்ஸருடன் சதத்தை அடித்து 110 ரன்கள் குவித்து பெவிலியன் திருப்பினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜோ ரூட் தம்முடைய பங்கிற்கு சதத்தை அடித்து 100 (95) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹாரி ப்ரூக் 3 ரன்னில் அவுட்டானாலும் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார்.

கடைசி நேரத்தில் பட்டாசாக விளையாடிய பட்லர் அரை சதத்தை அடித்து 62* (32) ரன்கள் குவித்தார். அவருடன் வில் ஜேக்ஸ் 19* (8) ரன்கள் எடுத்து ஃபினிஷிங் செய்ததால் 50 ஓவரில் இங்கிலாந்து 414/5 ரன்களை குவித்தது. இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது அதிக முறை 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த அணி என்ற இந்தியாவின் உலக சாதனையை இங்கிலாந்து சமன் செய்துள்ளது.

இதையும் படிங்க: இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடந்த சம்பவம் – கனடா அணி மோசமான சாதனை

இந்தியா, இங்கிலாந்து இரு அணிகளுமே தலா 7 முறை 400+ ரன்கள் அடித்துள்ளது. 8 முறை 400+ ரன்கள் அடித்துள்ள தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இப்போட்டியில் அந்த அணிக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 2, கோர்பின் போஸ்க் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

Advertisement