
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதை அடுத்து இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்காம் நகரில் துவங்கியது. அதில் முதலில் விளையாடிய இந்தியா 587 ரன்களை அடித்து அசத்தியது.
அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராவ்லி, ஓலி போப், பென் டக்கெட் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதே போல ஜோ ரூட் 22, பென் ஸ்டோக்ஸ் 0 ரன்களில் சிராஜ் வேகத்தில் அடுத்தடுத்து அவுட்டானார்கள்.
அதனால் 87/5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இங்கிலாந்துக்கு மிடில் ஆர்டரில் ஹரி ப்ரூக் – ஜேமி ஸ்மித் ஆகியோர் அதிரடியாக விளையாடி பதிலடி கொடுத்தார்கள். குறிப்பாக பிரசித் கிருஷ்ணா ஓவரில் 23 ரன்கள் அடித்த ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டை போல அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 80 பந்துகளில் சதத்தை அடித்து மிரட்டினார்.
அவருடன் சேர்ந்து ப்ரூக் தம்முடைய பங்கிற்கு சதத்தை அடித்து இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். நேரம் செல்ல செல்ல நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு ரசிகர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தனர். அப்போது ப்ரூக்கை 158 ரன்களில் போல்டாக்கிய ஆகாஷ் தீப் அடுத்து வந்த கிறிஸ் ஓக்ஸை 5 ரன்னில் காலி செய்தார்.
அதைப் பயன்படுத்திய சிராஜ் அடுத்ததாக வந்த கார்ஸ், ஜோஸ் டாங், சோயப் பசீர் ஆகியோரை குறுகிய இடைவேளையில் டக் அவுட்டாக்கினார். அதனால் ஸ்மித் 184* ரன்கள் எடுத்தும் இங்கிலாந்தை 407 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா 180 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியாவுக்கு சிராஜ் 6 ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையும் படிங்க: 303 ரன்ஸ் பார்ட்னர்ஷிப்.. இந்தியாவை வெளுத்த ப்ரூக் – ஸ்மித்.. 11 வருடத்துக்கு பின் வீழ்ச்சியை கண்ட பரிதாபம்
303 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இங்கிலாந்து 387/5 என வலுவான நிலையில் இருந்ததால் இந்தியா முன்னிலை பெறாதோ என்று ரசிகர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். ஆனால் அதன் பின் கம்பேக் கொடுத்த இந்தியா ஸ்மித்தை வைத்துக்கொண்டே மேற்கொண்டு 7. 2 ஓவரில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து முன்னிலை பெற்றுள்ளது. இதன் வாயிலாக ஒரு போட்டியில் 300 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் 500 ரன்களை கூட அடிக்காத முதல் அணியாக இங்கிலாந்து பரிதாப சாதனை படைத்துள்ளது.