இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அடுத்ததாக இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் மதியம் 1.30 மணிக்கு துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இந்திய அணியில் விராட் கோலி மீண்டும் திரும்பிய நிலையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அறிமுகமாக களமிறங்கினார். அதைத்தொடர்ந்து ஆட்டத்தை துவங்கிய இங்கிலாந்துக்கு 81 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த பில் சால்ட் 26 ரன்களில் சக்கரவர்த்தி சுழலில் சிக்கினார். அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் நிதானமாக விளையாடினார்.
ரூட் – ஜடேஜா சாதனை:
அவருடன் மறுபுறம் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 10 பவுண்டரியுடன் அரை சதத்தை அடித்து 65 ரன்கள் குவித்து ஜடேஜா சுழலில் சிக்கினார். அடுத்ததாக வந்த ஹரி ப்ரூக் நிதானமாக விளையாட முயற்சித்த போது 31 ரன்களில் ராணா வேகத்தில் அவுட்டானார். அவருக்கு அடுத்ததாக வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் தமது பங்கிற்கு 34 ரன்கள் எடுத்திருந்த போது பாண்டியா வேகத்தில் ஆட்டம் இழந்தார்.
ஆனால் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரூட் 6 பவுண்டரியுடன் 69 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜாவிடம் விக்கெட்டை பறி கொடுத்தார். இதையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் தரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படும் ரூட்டை 13வது முறையாக ஜடேஜா அவுட்டாக்கினார். அதனால் ரூட்டை 2வது அதிக முறை அவுட் செய்த பவுலர் என்ற ஜஸ்ப்ரித் பும்ரா, ஜோஸ் ஹேசல்வுட் (தலா 13) சாதனையையும் ஜடேஜா சமன் செய்தார்.
இந்தியா வெல்லுமா:
மறுபுறம் இங்கிலாந்துக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்கள் (56 முறை) அடித்த வீரர் என்ற ஆல் டைம் சாதனையை ரூட் படைத்தார். இதற்கு முன் இயன் மோர்கன் 55 முறை 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. இறுதியில் லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக 41, அடில் ரசித் 14 ரன்கள் எடுத்த உதவியுடன் 49.5 ஓவர்களில் இங்கிலாந்தை 304 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டாக்கியது.
இதையும் படிங்க: 33 வயதில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானாலும் 2 ஆவது ஓவரிலேயே கெத்து காட்டிய – வருண் சக்ரவர்த்தி
இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 10 ஓவரில் 1 மெய்டன் உட்பட 35 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதைத் தொடர்ந்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்கிறது. இந்தப் போட்டியிலும் வென்று ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்ற இந்திய அணி முயற்சிக்க உள்ளது.



