- Advertisement -
உலக கிரிக்கெட்

மண்ணை கவ்விய பஸ்பால்.. 6க்கு 5 தோல்வி.. 2017க்குப்பின் 0 வெற்றி.. 27 வருடம் கழித்து இங்கிலாந்து தோல்வி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 132 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டிய தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த நிலையில் 2வது போட்டி செப்டம்பர் 4ஆம் தேதி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா 50 ஓவரில் சிறப்பாக விளையாடி 330/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேத்தியூ பிரீட்ஸ்க் 85, ஸ்டப்ஸ் 58, தேவால்ட் ப்ரேவிஸ் 42, ஐடன் மார்க்ரம் 49, ரியன் ரிக்கல்டன் 35, கோர்பின் போஸ்க் 32* ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

தென்னாப்பிரிக்கா வெற்றி:

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்துக்கு ஜேமி ஸ்மித் 0, பென் டக்கெட் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஜோ ரூட் 61, ஜேக்கப் பெத்தல் 58 ரன்கள் அடித்து சரிவை சரி செய்து அவுட்டானார்கள். ஆனால் மிடில் ஆர்டரில் கேப்டன் ஹாரி ப்ரூக் 33 ரன்கள் எடுத்து அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் 61 (51) ரன்கள் எடுத்து அசத்திய போதிலும் வில் ஜேக்ஸ் 39 ரன்னில் அவுட்டானார். அதனால் இங்கிலாந்தின் வெற்றி கேள்விக்குறியான போது ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடியாக 27* (14) ரன்கள் எடுத்துப் போராடினார். ஆனாலும் கடைசி பந்தில் சிக்ஸர் தேவைப்பட்ட போது சிங்கிள் மட்டுமே எடுத்த அவருடைய அதிரடியையும் தாண்டி 50 ஓவரில் இங்கிலாந்து 325/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

மண்ணைக் கவ்விய பஸ்பால்:

அதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றது. அத்துடன் 1998க்குப்பின் முதல் முறையாக இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் தொடரில் தோற்கடித்து தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நன்ரே பர்கர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே பஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடுவோம் என்று பெருமைப் பாடக்கூடிய இங்கிலாந்து 27 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் தொடரில் அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் 2017க்குப்பின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய 4 ஒருநாள் தொடர்களில் இங்கிலாந்து ஒருமுறை கூட வெல்லவில்லை.

இதையும் படிங்க: வெறும் 5 ரன்ஸ்.. 1998க்குப்பின் தெ.ஆ வரலாற்று சாதனை வெற்றி.. கடைசி ஓவரில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்

ஒட்டுமொத்தமாக 2023 உலகக்கோப்பைக்கு பின் விளையாடிய 6 ஒருநாள் தொடர்களில் இங்கிலாந்து 5வது தோல்வியை சந்தித்துள்ளது. 2023 உலகக் கோப்பைக்குப் பின் விளையாடிய 31 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து 10 வெற்றி 21 தோல்விகளை சந்தித்துள்ளது. இதைப் பார்க்கையில் இங்கிலாந்தின் பஸ்பால் அணுகுமுறை மண்ணைக் கவ்வியுள்ளது என்றால் மிகையாகாது.

- Advertisement -