இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி மே 29ஆம் தேதி பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜேமி ஸ்மித் 37 (24) ரன்களை அதிரடியாக விளாசி அவுட்டானார்.
மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்து 60 (48) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் தம்முடைய பங்கிற்கு அரை சதத்தை அடித்து 57 (65) ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய கேப்டன் ஹரி ப்ரூக் அரை சதத்தை அடித்து 58 (45) ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து உலக சாதனை:
அவருடன் சேர்ந்து விளையாடிய ஜோஸ் பட்லர் 37 (32) ரன்கள் விளாசி பெவலியின் திரும்பினார். அவர்கள் அனைவரையும் விட மிடில் ஆர்டரில் அட்டகாசமாக விளையாடி ஜேக்கப் பேத்தல் 8 பவுண்டரி 5 சிக்சரை பறக்க விட்டு 82 (53) ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் வில் ஜேக்ஸ் 39 (24) ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் இங்கிலாந்து 400/8 ரன்களை அடித்து அசத்தியது.
ஆச்சரியப்படும் வகையில் எந்த பேட்ஸ்மேனும் சதம் அடிக்காமலேயே இங்கிலாந்து 400 ரன்கள் தொட்டது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடிக்காமலேயே 400 ரன்கள் தொட்டு அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன் 2007ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா சதம் அடிக்காமலேயே 392/6 ரன்கள் முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும்.
அபார வெற்றி:
தற்போது அந்த 18 வருட சாதனையை இங்கிலாந்து முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜெய்டேன் சீல்ஸ் 4, அல்சாரி ஜோசப் 2, ஜஸ்டின் க்ரீவ்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை சிறப்பாக பவுலிங் செய்த இங்கிலாந்து 26.2 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.
இதையும் படிங்க: இந்த ஒரே திட்டத்தை வெச்சு பஞ்சாப்பை முடிச்சேன்.. ஜுன் 3இல் வெறித்தனமா கொண்டாடுவோம்.. சூயஸ் பேட்டி
அதிகபட்சமாக கேசி கார்ட்டி 22, கேப்டன் ஷாய் ஹோப் 25, ஜெய்டேன் சீல்ஸ் 29* ரன்கள் அடித்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சாகிப் மஹ்முத் 3, ஜேமி ஓவர்டன் 3, அடில் ரசித் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதனால் 238 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இங்கிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.



