
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் முதலாவதாக விளையாடிய ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. அடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலையில் சம்பிரதாய கடைசிப் போட்டி ஜூன் 10ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11:00 மணிக்கு சவுதம்டன் நகரில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு துவக்க வீரர்கள் ஜேமி ஸ்மித் – பென் டக்கெட் ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடியாக பேட்டிங் செய்தனர். 9 ஓவர்கள் வரை வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அடித்து நொறுக்கிய அந்த ஜோடி 120 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார துவக்கத்தைக் கொடுத்தது.
அதில் ஜேமி ஸ்மித் அரை சதத்தை அடித்து வெறும் 26 பந்தில் 60 ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்து விளையாடிய ஜோஸ் பட்லர் 22 (10) ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டக்கெட் 10 பவுண்டரி 2 சிக்ஸருடன் 84 (46) ரன்கள் குவித்து அவுட்டானார்.
மிடில் ஆர்டரில் கேப்டன் ஹரி ப்ரூக் அதிரடியாக விளையாடி 35* (22), ஜேக்கப் பேத்தல் 36* (16) ரன்கள் விளாசி அபார ஃபினிஷிங் கொடுத்தார்கள். அதனால் 20 ஓவரில் இங்கிலாந்து 248/3 ரன்கள் குவித்து தங்களுடைய சொந்த மண்ணில் அதிகபட்ச டி20 ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 2022ஆம் ஆண்டு பிரிஸ்டோல் நகரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 234/6 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்கள் ஜான்சன் சார்லஸ் 9, எவின் லெவிஸ் 9 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப் 45 (27), ஹெட்மயர் 26 (8) ரன்கள் அதிரடியாக எடுத்து பெவிலியன் திரும்பினர். அவர்களுக்கு அடுத்ததாக ரூதர்போர்ட் 1, செபார்ட் 0 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.
இருப்பினும் ரோவ்மன் போவெல் அதிரடியாக விளையாடி 79* (45) ரன்கள் எடுத்துப் போராடினார். ஆனால் எதிர்ப்புறம் ஜேசன் ஹோல்டர் 25 (12) என மற்ற பேட்ஸ்மேன்கள் ஃபினிஷிங் செய்ய தவறினார்கள். அதனால் 20 ஓவரில் 211/8 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸை கட்டுப்படுத்திய இங்கிலாந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து கோப்பையை வென்றது.
இதையும் படிங்க: அவரை மிஸ் செஞ்சாலும்.. ஆனா திறமையான இளம் இந்தியாவை வீழ்த்த ரெடியா இருக்கோம்.. ஓலி போப் பேட்டி
அந்த அணிக்கு அதிகபட்சமாக லுக் வுட் 3, அடில் ரசித் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதன் வாயிலாக 4 வருடங்கள் கழித்து ஒரு டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து சாதனை வெற்றி பெற்றது. கடைசியாக 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து ஒயிட்வாஷ் வெற்றியைப் பெற்றது.