உழைப்பே உயர்வு, ஃபிக்சிங் செய்தால் முன்னேறவே முடியாது – ஓபனாக பேசும் சோயப் அக்தர்

Akhtar
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த சீஸனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சிக்குப் பின் தயாராக உள்ளன.

IPL 2022

- Advertisement -

இந்த வருடம் 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முழுவதும் மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ள நிலையில் அதைப் பார்ப்பதற்காக 25% ரசிகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

பணம் கொழிக்கும் ஐபிஎல்:
கடந்த 2008-ஆம் ஆண்டு 8 அணிகளுடன் ஒரு சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இன்று பணத்திலும் தரத்திலும் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டு உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய தொடராக உருவெடுத்துள்ளது. உலகின் இதர நாடுகளில் பிக்பேஷ் போன்ற டி20 தொடர்கள் நடைபெற்றாலும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைப்பதால் உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றே கூறலாம்.

IPL

இந்த வருடம் லக்னோ 7000+ கோடி மற்றும் குஜராத் 5000+ கோடி என புதிதாக உருவாக்கப்பட்ட ஐபிஎல் அணிகளின் வாயிலாக பிசிசிஐக்கு 12,000 க்கும் மேற்பட்ட கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. மேலும் இந்த முறை ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பிகளுக்கு ஸ்பான்சர்ஷிப் அறிவித்துள்ள பிசிசிஐ வரலாற்றிலேயே முதல் முறையாக ஸ்பான்சர்ஷிப் வாயிலாக மட்டும் 1000 கோடி என்ற மாபெரும் இலக்கை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. அத்துடன் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் பல கோடி ரூபாய்களை அள்ளுகிறார்கள். சொல்லப்போனால் ஏலத்தின் வாயிலாக ஒப்பந்தமாகி பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்கள் கூட பல லட்சங்கள் முதல் கோடி ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.

- Advertisement -

உழைப்பே வெற்றி, பிக்சிங் தோல்வி:
மொத்தத்தில் இந்த ஐபிஎல் தொடர் வந்ததன் காரணமாக பொருளாதார ரீதியில் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது. அதேபோல் இந்த தொடரின் வாயிலாக இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் விளையாடும் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களின் வாழ்வாதாரத்தில் புதிய உயரங்களை எட்டியுள்ளனர். இந்நிலையில் ஒரு காலத்தில் சாப்பிடுவதற்கு கஷ்டப்பட்ட இந்திய கிரிக்கெட் துறை இன்று பல கோடி ரூபாய்களை வருமானமாக சம்பாதிக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பாராட்டியுள்ளார்.

Akhtar

அதற்கு காரணமாக விளங்கும் ஐபிஎல் தொடரை பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு சமயத்தில் யாருமே பணம் சம்பாதிக்க முடியாமல் கஷ்டப்பட்ட இந்தியாவை பார்த்தேன். அதன்பின் சச்சின் டெண்டுல்கர் மட்டும் பணம் சம்பாதிக்கும் இந்தியாவை பார்த்தேன். ஆனால் இப்போது இந்தியாவில் உள்ள அனைவரிடமும் பணம் உள்ளதை பார்க்கிறேன். அதற்கு ஏற்றார்போல் அவர்களும் பொறுப்புடன் செயல்படுகின்றனர். அதற்காக இந்த தொடரும் (ஐபிஎல்) ஒருசில நிபந்தனைகளை முன்வைக்கிறது. அதாவது நீங்கள் பணம் சம்பாதிக்க விரும்பினால் அதற்காக களத்திலும் களத்திற்கு வெளியேயும் உங்கள் வேளையில் பொறுப்புடனும் கட்டுக்கோப்புடனும் நடந்துகொள்ள வேண்டுமென கூறுகிறது. எனவே பொறுப்புடன் இருந்து பணம் சம்பாதிப்பவர்களை பார்ப்பது பெருமையாக உள்ளது. அதே சமயம் நீங்கள் பொறுப்புடன் இல்லாமல் மேட்ச் பிக்சிங் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அது உங்களுக்கு தோல்வியைத்தான் கொடுக்கும்” என கூறினார்.

பிக்சிங் வேண்டாம்:
கிரிக்கெட்டில் தங்களது திறமையை நிரூபித்து அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் பொறுப்புடன் விளையாடினால் யாரும் கோடீஸ்வரன் ஆகலாம் என்ற உன்னதமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சோயப் அக்தர் பாராட்டியுள்ளார். மேலும் மேட்ச் பிக்சிங் செய்து பெயரைக் கெடுத்துக் கொண்டு அந்த பணத்தில் வாழ்வதைவிட ஐபிஎல் போன்ற தொடரில் கடினமாக உழைத்து பெரும் புகழுடன் வாழ்வதுதான் மிகச்சிறந்த வழி என இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சோயப் அக்தர் ஆலோசனை கூறியுள்ளார். பொதுவாகவே மேட்ச் பிக்சிங் செய்வதில் பெயர் போன பாகிஸ்தானும் அதன் ஒரு சில வீரர்களும் அதன் காரணமாக வரலாற்றில் பல கெட்ட பெயரை வாங்கியுள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் அது போன்ற தவறான வழிகளில் செல்வதை தடுக்கும் ஐபிஎல் தொடரில் உண்மையாகவே பாராட்டத்தக்கது என அவர் கூறியுள்ளார்.

Ganguly-ipl
IPL MI

ஐபிஎல் தொடரின் வளர்ச்சியை பார்த்து இந்தியாவுக்கு போட்டியாக கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் பிரீமியர் லீக் எனப்படும் டி20 தொடரை இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இருப்பினும் ஐபிஎல் தொடரின் வளர்ச்சியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் எட்ட முடியவில்லை. அதிலும் ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் என்பது பிஎஸ்எல் தொடரின் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு ஈடாவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement