இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 38 வயதில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2010 முதல் இந்தியாவுக்காக விளையாடிய அவர் இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளரான அவர் முத்தையா முரளிதரனுக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
அப்படி இருந்தும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு இந்திய அணி தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் இருந்தது. அதன் காரணமாக ஏமாற்றமடைந்த அவர் வாஷிங்டன் சுந்தர் போன்ற வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அஸ்வினை இந்திய அணி மரியாதையுடன் சரியாக நடத்தவில்லை என்று முன்னாள் ஜாம்பவான் ஸ்பின்னர் எரப்பள்ளி பிரசன்னா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
மரியாதையா நடத்தல:
மேலும் அஸ்வினுடைய இடத்தை சுந்தர் போன்ற மற்ற வீரர்கள் நிரப்புவது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 84 வயதாகும் அவர் அதற்கான காரணம் பற்றி பேசியது பின்வருமாறு. “அஸ்வின் என்ன ஒரு நம்ப முடியாத பவுலராக இருந்தார். அவர் வரலாற்றின் மகத்தான ஸ்பின்னர்களில் ஒருவராக இருப்பார். வெளிநாடுகளுக்கு இந்தியா பயணித்த போது அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நேரங்களையும் நீங்கள் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும்”
“இந்திய அணி அவரை மரியாதையுடன் நடத்தியதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர் வெளிநாடுகளிலும் நன்றாகவே செயல்பட்டார். அந்த விஷயம் தான் அஸ்வின் ஓய்வுக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று நினைக்கிறேன். இது இந்திய கிரிக்கெட்டுக்கு சோகமான நாள். அவரால் நான் பெருமைப்படுகிறேன். ஏனெனில் அவர் சுழல் பந்து வீச்சை உயரிய இடத்திற்கு எடுத்துச் சென்றார்”
நிரப்ப முடியாது:
“அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியுமா என்பது எனக்கு சந்தேகமாகும். ஏனெனில் அஸ்வின் தனித்துவமானவர். அவர் ஓய்வு பெற்றது தற்சமயத்தில் இந்திய அணிக்கு கவலைக்குரிய விஷயமாகும். ஏனெனில் அவர் மிடில் ஓவர்களை நிர்வகித்தவர். அதுவே டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு மிகவும் முக்கியமானதாகும். அதாவது நீங்கள் முதலில் பந்து வீசும் போது முதல் நாளின் உணவு இடைவெளி மற்றும் தேனீர் இடைவெளிக்கு இடையேயான நேரத்தை நிர்வகிப்பது முக்கியம்”
இதையும் படிங்க: இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கும் ஹெட்டை முடிக்க இதை செய்ங்க.. புஜாரா, சஞ்சய் பங்கர் 2 ஐடியா
“அதுவே போட்டி எந்தப் பக்கம் செல்லும் என்பதை தீர்மானிக்கும். அங்கே தான் அஸ்வின் அற்புதமாக செயல்பட்டார். வாஷிங்டன் சுந்தரை அவமதிப்பதற்காக இப்படி சொல்லவில்லை. ஆனால் இப்போதுள்ள ஆஃப் ஸ்பின்னர்கள் ஃபிளாட்டாக, வேகமாக பந்து வீசுகிறார்கள். உண்மையில் பந்தை சுழற்றுவதில்லை. எனவே அஸ்வின் செய்ததை யாரும் செய்ய முடியாது. அவரது இடம் நீண்ட காலம் நிரப்பப்படாமல் இருக்கும்” என்று கூறினார்.



