ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற ப்ராவோ – அடுத்ததாக என்ன செய்ய போகிறார்? சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழும் செய்தி இதோ

Bravo
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் 2023ஆம் ஆண்டு கோடைகாலத்தில் நடைபெறுகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது கேப்டன் எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கைக்வாட் உள்ளிட்ட முக்கிய வீரர்களை தக்க வைத்தது. அதே சமயம் இந்த வருடம் கிறிஸ் ஜோர்டான் போன்ற சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்திய வீரர்களை விடுவித்த சென்னை நிர்வாகம் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் ட்வயன் ப்ராவோவையும் கழற்றி விட்டது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

ஏனெனில் ஐபிஎல் கேரியரை மும்பை அணியில் துவங்கினாலும் ஒரு சில வருடங்களுக்குப் பின் சென்னை அணிக்கு வந்த அவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். சொல்லப்போனால் 161 போட்டிகளில் 183 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக வரலாற்றுச் சாதனை படைத்து 1560 ரன்களையும் சேர்த்து சென்னை 4 கோப்பைகளை வென்றதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

- Advertisement -

விடை பெற்ற ப்ராவோ:
மேலும் நாட்கள் செல்ல செல்ல பழைய சரக்கை போல் ஸ்லோ பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து ஐபிஎல் வரலாற்றில் 2 ஊதா தொப்பிகளை வென்ற முதல் வீரராகவும் சாதனை படைத்த அவர் பிக்பேஷ் உட்பட உலகின் அனைத்து பிரிமியர் லீக் டி20 தொடர்களிலும் விளையாடி 500க்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்த ஒரே பவுலராகவும் உலக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் சமீப காலங்களாகவே அதிகப்படியான காயத்தை சந்தித்த அவர் பழைய பன்னீர்செல்வமாக அசத்த முடியாத காரணத்தால் ஏற்கனவே கடந்த 2021 டி20 உலக கோப்பையுடன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

அதன் காரணமாகவே 39 வயதை கடந்து விட்ட அவரை சென்னை நிர்வாகமும் விடுவித்து புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யாத ட்வயன் ப்ராவோ ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதே சமயம் தங்களது விஸ்வாசியை போல் செயல்பட்ட அவருடைய அனுபவத்தை வெளியே விட விரும்பாத சென்னை நிர்வாகம் அவரை தங்களுடைய பந்து வீச்சு பயிற்சியாளராக அறிவித்து பதிலுக்கு விஸ்வாசத்தை காட்டியது.

- Advertisement -

குறிப்பாக ஏற்கனவே சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்த லட்சுமிபதி பாலாஜி சென்னை சூப்பர் கிங்ஸ் அகடமியில் பயிற்சியாளராக செயல்படுவதால் ஒரு வருடம் தற்காலிகமாக ஓய்வெடுக்க உள்ளார். அதனால் அவருக்கு பதில் வரும் சீசனில் ட்வயன் ப்ராவோ பவுலிங் பயிற்சியாளராக செயல்படுவார் என்று சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பற்றி சென்னை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பிராவோ பேசியது பின்வருமாறு. “உலகிலேயே மிகவும் கடினமான லீக் தொடரில் 15 வருடங்கள் விளையாடிய பின் ஐபிஎல் தொடரிலிருந்து விடை பெறுவதாக இன்று நான் அறிவிக்கிறேன்”

“நிறைய மேடு பள்ளங்களை கடந்து இந்த 15 வருடங்களில் நிறைய மகிழ்ச்சியான தருணங்களையும் நான் எதிர்கொண்டேன். இந்த அறிவிப்பு எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் எனது ரசிகர்களுக்கும் சோகமானதாக இருக்கும். இருப்பினும் என்னுடைய 15 வருட கேரியரை நான் கொண்டாடுகிறேன். அதே சமயம் பவுலராக விடைபெறும் நான் பயிற்சியாளராக பொறுப்பேற்று இளம் சென்னை பவுலர்களுடன் செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த வாய்ப்பில் அடுத்த தலைமுறை சாம்பியன் வீரர்களை உருவாக்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இத்தனை வருடங்களாக என் மீது அன்பு மற்றும் ஆதரவை காட்டிய அனைவருக்கும் நன்றி. எப்போதும் மஞ்சள் அன்பு” என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் மகத்தான வீரராக போற்றப்படும் அவரது ஓய்வால் சற்று சோகமடைந்துள்ள சென்னை உட்பட அனைத்து ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். அதே சமயம் பயிற்சியாளராக இளம் வீரர்களை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அவர் இருப்பதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.

Advertisement