வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் பிராவோ ஓய்வு அறிவிப்பு – இந்த வாரத்தில் இவர் 3 ஆவது நபர்

Bravo
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தற்போது வரை கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் 2010-ஆம் ஆண்டு, ஒருநாள் போட்டிகளில் 2014ஆம் ஆண்டு வரை மட்டுமே விளையாடிய பிராவோ டி20 போட்டிகளில் 2006ம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து விளையாடி வருகிறார்.

bravo 1

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ தனது 86வது டி20 போட்டியில் விளையாடிய பின்னர் நேற்று திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக் கோப்பை சாம்பியன்ஷிப்பை இருமுறை வென்ற போதும் அணியில் இருந்த பிராவோ இந்த முறை நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திடீர் ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.

தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டியின் போது அவரின் இந்த முடிவினை அணியின் கேப்டன் பொல்லார்டு பகிர்ந்துகொண்டார். ஏற்கனவே இரண்டு போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட நேற்று நடைபெற இருந்த நான்காவது டி20 போட்டியும் மழையால் நடைபெறாமல் போனது. இந்த தொடரில் ஏற்கனவே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி டி20 தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அணியின் முக்கிய வீரர் ஒருவரை வாழ்த்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் நீண்டகாலம் நமக்காக விளையாடி வந்த வீரர் ஒருவர் ஓய்வு அறிவிக்க உள்ளார். அவர் தான் நம்முடைய நட்சத்திர வீரர் பிராவோ என்று அவர் பேசி இருந்தார்.

bravo 2

மேலும் இந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தான் அவருக்கு கடைசி போட்டி என்று குறிப்பிட்ட அவர் பிராவோவின் ஓய்வு முடிவை உறுதி செய்திருந்தார். ஏற்கனவே கடந்த வாரம் ஸ்டோக்ஸ் மற்றும் இலங்கை அணியின் இசுரு உதானா ஆகியோர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் தற்போது 3-வது வீரராக பிராவோ தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement