
துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ரவுண்ட் போட்டிகள் அனந்தபூரில் நடைபெற்று வருகிறது. அதில் செப்டம்பர் 12ஆம் தேதி அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி அணிகள் மோதி வருகின்றன. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சி அணி அபாரமாக பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸ் 525 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு 189 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இசான் கிசான் சதமடித்து 111 ரன்களும் தமிழக வீரர் பாபா இந்திரஜித் 78 ரன்களும் குவித்தனர். அதே போல மற்றொரு தமிழக வீரர் சாய் சுதர்சன் 43, ரஜத் படிடார் 40 ரன்கள் எடுத்தனர்.
மேலும் ஆரம்பத்திலேயே காயமடைந்த கேப்டன் ருதுராஜ் முதலுதவிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்து பேட்டிங் செய்து அரை சதமடித்து 58 ரன்கள் குவித்தார். இது போக 7வது இடத்தில் களமிறங்கி தம்முடைய பங்கிற்கு அசத்தலாக விளையாடிய மானவ் சுந்தர் அரை சதமடித்து 82 ரன்களும் அன்சுல் கம்போஜ் 38 ரன்களும் எடுத்தனர். அவர்களது சிறப்பான ஆட்டத்தால் 2024 துலீப் கோப்பையில் 500 ரன்கள் அடித்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா சி பெற்றது.
மறுபுறம் சுமாராக பந்து வீசிய இந்தியா பி அணி சார்பில் அதிகபட்சமாக ராகுல் சஹர் 4, முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் களறங்கிய இந்தியா பி அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் தமிழக நாராயன் ஜெகதீசன் ஆகியோர் பொறுப்புடன் விளையாடினர். அவர்களை எளிதில் அவுட்டாக்க முடியாமல் ருதுராஜ் அணி பவுலர்களும் தடுமாறினர்.
அதைப் பயன்படுத்திய அந்த இருவருமே அரை சதமடித்து தங்களுடைய அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். இறுதியில் முடிவுக்கு வந்த இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்தியா பி அணி 124-0 ரன்கள் குவித்துள்ளது. ஆனால் இன்னும் இந்தியா சி அணியை விட 401 ரன்கள் பின்தங்கியுள்ள அந்த அணிக்கு களத்தில் ஜெகதீசன் 67*, அபிமன்யு ஈஸ்வரன் 51* ரன்களுடன் உள்ளனர்.
இதையும் படிங்க: 222 ரன்ஸ்.. முதல் பந்திலேயே விக்கெட்.. ஸ்ரேயாஸ் அணியை வெளுக்கும் மயங் அணி.. 2வது தோல்வி உறுதியா?
இன்னும் அந்த அணிக்கு முசீர் கான், சர்பராஸ் கான், ரிங்கு சிங், நித்திஷ் ரெட்டி, தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் ஆகியோர் பேட்டிங் செய்ய உள்ளனர். எனவே 401 ரன்கள் முன்னிலை கொண்டிருந்தாலும் ருதுராஜ் அணிக்கு பெரிய சவால் காத்திருக்கிறது என்று சொல்லலாம். அதனால் இப்போட்டியில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.