துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ரவுண்ட் போட்டிகள் அனந்தபூரில் நடைபெற்று வருகிறது. அதில் மயங் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 12ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா டி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடி 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு பிரதம் சிங் 7, கேப்டன் மயங் அகர்வால் 7, திலக் வர்மா 10, ரியான் பராக் 37, குமார் குசக்ரா 28 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 93-5 என தடுமாறிய அந்த அணியை மிடில் ஆர்டரில் சம்ஸ் முலானி அரை சதமடித்து 89 ரன்களும் குவித்து ஓரளவு காப்பாற்றினார்.
தடுமாறும் ஸ்ரேயாஸ் அணி:
அவருடன் சேர்ந்து விளையாடிய தான்னுஷ் கோட்டியான் தம்முடைய பங்கிற்கு அரை சதமடித்து முக்கியமான 53 ரன்கள் குவித்தார். இந்தியா டி அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா டி அணிக்கு அதர்வா டைட் 4, யாஷ் துபே 14, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 0, சஞ்சு சாம்சன் 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் தேவதூத் படிக்கல் நங்கூரமாக விளையாடி 92 ரன்களும் கடைசி நேரத்தில் ஹர்ஷித் ராணா அதிரடியாக 31 (29) ரன்கள் எடுத்தும் இந்தியா டி அணி 183 ரன்களுக்கு சுருண்டது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக கலீல் அகமது, ஆகிப் கான் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
2வது தோல்வியா:
அதன் பின் 107 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு கேப்டன் மயங் அகர்வால் மற்றும் பிரதம் சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினர். நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடி 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்ரேயாஸ் ஐயர் அணி பவுலர்களை திணறடித்தது. அதனால் திகைத்து நின்ற ஸ்ரேயாஸ் ஐயர் மாலை நேரத்தில் தாமே பந்து வீச முடிவெடுத்தார்.
இதையும் படிங்க: என்னவொரு திமிரு.. இனிமே ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் டீம் பக்கம் வர வாய்ப்பே இல்ல – ரசிகர்கள் விமர்சனம்
ஆச்சரியப்படும் வகையில் அவர் வீசிய முதல் பந்திலேயே கேப்டன் மயங் அகர்வால் 56 ரன்களில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அத்துடன் நிறைவுக்கு வந்த 2வது நாள் முடிவில் 115-1 ரன்கள் எடுத்துள்ள இந்தியா ஏ அணிக்கு ப்ரதம் சிங் 59* ரன்களுடன் உள்ளார். தற்சமயத்தில் இந்தியா ஏ 222 ரன்கள் வலுவான முன்னிலை பெற்றிருப்பதால் முதல் ரவுண்டை போலவே இப்போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி தோல்வியை சந்திப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது.



