அவரை முடிந்து போனவர்னு முத்திரை குத்தாதீங்க – இந்திய பவுலருக்கு ஸ்ரீசாந்த் பெரிய ஆதரவு

Sreesanth
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்து தலைகுனிந்த இந்தியா 2வது போட்டியில் அபார வெற்றி பெற்று தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது. அதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் இத்தொடரின் முக்கியமான 3வது போட்டி செப்டம்பர் 25ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் நடைபெறுகிறது. முன்னதாக மொகாலியில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை கட்டுப்படுத்த முடியாத அக்சர் படேல் தவிர ஏனைய இந்திய பவுலர்கள் வள்ளலாக ரன்களை வாரி வழங்கியது தோல்வியை பரிசளித்தது. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நேரத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய சீனியர் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கேரியரில் முதல் முறையாக அரை சதமடித்து 52 ரன்களை வாரி வழங்கினார்.

Rohit Sharma Bhuvneswar Kumar

- Advertisement -

பொதுவாகவே துல்லியமாக பந்து வீசுபவராக அறியப்படும் புவனேஸ்வர் குமார் புதிய பந்தில் ஸ்விங் செய்து பவர்பிளே ஓவர்களில் அசத்தினாலும் கடைசி கட்ட ஓவர்களில் பழைய பந்தில் வெறும் 120 – 130+ கி.மீ வேகத்தில் பந்து வீசும்போது எதிரணி பேட்ஸ்மேன்களிடம் சரமாரியான அடி வாங்குகிறார். அந்த வகையில் சமீபத்திய ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றின் முதலிரண்டு போட்டிகளில் 19வது ஓவரில் எதிரணிக்கு முறையே 25, 19 ரன்கள் தேவைப்பட்ட போது அனுபவத்தை காட்டாத அவர் முறையே 19, 14 ரன்களை வாரி வழங்கியது தோல்வியை பரிசளித்தது.

இன்னும் முடியவில்லை:
அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் மீண்டும் மொஹாலியில் 19வது ஓவரில் எதிரணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட போது 18 ரன்களை கொடுத்து கொஞ்சமும் போராடாமல் வெற்றியை தாரை வார்த்தார். அதனால் 19வது ஓவரில் கண்டம் என்று ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ள அவர் நிறைய முன்னாள் வீரர்களின் விமர்சனங்களையும் சந்தித்துள்ளார். மேலும் இவரை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவில் எப்படி இந்தியா உலகக் கோப்பையை வெல்லப் போகிறது என்ற கவலையும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Bhuvaneswar Kumar

அதன் காரணமாகவே நாக்பூரில் 8 ஓவர்களாக நடைபெற்ற போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்ட புவனேஸ்வர் குமார் 3வது போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில் புவனேஸ்வர் குமார் முடிந்து போனவர் என்று முத்திரை குத்த வேண்டாம் என முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் விமர்சனங்களுக்கு பதிலடியும் ஆதரவும் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அனைவரும் புவியை பற்றி பேசுகிறார்கள். ஆனால் அவரை அவராக இருக்க விடுங்கள். அவர் இந்திய கிரிக்கெட் கண்ட சிறந்த வீரர்களில் ஒருவர்”

- Advertisement -

“அவருடைய சாதனைகளைப் பாருங்கள். பாகிஸ்தானுக்கு எதிரான அறிமுகமான முதல் போட்டி முதல் இப்போது வரை அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு கிரிக்கெட்டர் வாழ்விலும் மேடுபள்ளங்கள் இருப்பது சகஜமாகும். எனவே அவருக்கு அழுத்தத்தை கொடுக்காமல் ஆதரவு கொடுங்கள். அதை நீங்கள் செய்யும் பட்சத்தில் அவர் எங்கும் செல்லாமல் நிச்சயமாக தன்னை நிரூபித்துக் காட்டுவார். மேலும் அண்டர்-17 அளவிலிருந்தே புவனேஸ்வர் குமாரை எனக்கு நன்றாக தெரியும்”

Sreesanth 1

“அந்த வகையில் தற்போது செயல்படுவதை விட அவர் இன்னும் சிறப்பாக செயல்படுவார் என்பதும் எனக்கு தெரியும். அதனால் அவரை முடிந்து போனவர் என்று எழுத வேண்டாம். மேலும் அவருடைய 19ஆவது ஓவர் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல 2018க்குப்பின் சந்தித்த காயத்தால் பார்மை இழந்து இந்திய அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகளை இழந்த புவனேஸ்வர் குமார் அதற்காக மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து கம்பேக் கொடுத்துள்ளார். இப்போதும் பவர்பிளே ஓவர்களில் உலகின் அத்தனை பேட்ஸ்மேன்களையும் மிரட்டக்கூடிய திறமை பெற்றுள்ள அவர் இந்த விமர்சனங்களிலிருந்து பாடங்களை கற்று கடைசி கட்ட ஓவர்களிலும் சிறப்பாக பந்து வீச முயற்சிப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

இதையும் படிங்க : இதுக்குதான் இவ்வளவு பெரிய பில்டப்பா? தோனியின் 2 மணி அறிவிப்பால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் – என்ன நடந்தது?

மேலும் 10 வருடங்களுக்கு மேல் விளையாடிய அனுபவம் பெற்றுள்ளதால் நிச்சயமாக தோல்வியில் துவளாமல் தேவையான பயிற்சிகளை எடுத்து அதிலிருந்து மீண்டெழுந்து விரைவில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு  அவர் போராடுவார் என்று நம்பலாம்.

Advertisement