- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உங்களுக்கு ப்ரூவ் பண்ணனும் அவசியமில்லை – இந்தியாவை துச்சமாக பேசிய மைக்கேல் வாகனுக்கு பாண்டியா கொடுத்த பதிலடி என்ன

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் அழுத்தமான நாக் அவுட் சுற்றில் வழக்கம் போல சொதப்பி படுதோல்வியை சந்தித்து பரிதாபமாக வெளியேறியது. அதனால் 2007க்குப்பின் 2வது கோப்பை வெல்ல வேண்டும் என்ற ரசிகர்களின் கனவு மீண்டும் கனவாகவே போயுள்ளது. மறுபுறம் ஆரம்ப முதலே சீரான வெற்றிகளுடன் ஃபைனலுக்கு தகுதி பெற்று பாகிஸ்தானின் 1992 ஸ்க்ரிப்ட்டை உடைத்த ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து 2010க்குப்பின் 2வது கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதிலும் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியாவை செமி ஃபைனலில் 170/0 ரன்கள் குவித்து அடித்து நொறுக்கிய அந்த அணியின் அணுகுமுறை அனைவரது பாராட்டுகளை பெற்றது.

முன்னதாக 2019இல் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து தற்போது டி20 உலக கோப்பையையும் வென்றுள்ளதால் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நேரத்தில் 20 ஓவர் மற்றும் 50 ஓவர்களை வென்ற முதல் அணி என்ற சரித்திரத்தை படைத்துள்ளது. ஆரம்ப காலங்களில் அதிகமாக தடுமாறினாலும் 2017இல் இயன் மோர்கன் வருகைக்கு பின் அதிரடி அணுகுமுறையை பின்பற்றி தற்சமயத்தில் உலகிலேயே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அணியாக ஜொலிக்கும் இங்கிலாந்தை எதிரணிகள் பின்பற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் உலா வருகின்றன.

எதுக்கு ப்ரூவ் பண்ணனும்:

குறிப்பாக ஐபிஎல் எனும் அற்புதமான தொடரை நடத்தி அதிரடியான வீரர்களையும் அதிரடி பாதையில் நடக்கும் அணுகு முறையையும் அனைவருக்கும் கற்றுக்கொடுத்த இந்தியா இப்படி உலக கோப்பைகளில் தடுமாறுவது ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருந்தார். அதிலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியா இன்னும் காலம் கடந்த பழைய யுக்திகளை கையாள்வதாக தெரிவித்திருந்த அவர் வீராப்பை குறைத்துக் கொண்டு அந்த பழைய யுக்திகளை தூக்கி எறிந்து விட்டு இங்கிலாந்தை பின்பற்றுமாறு சமீபத்தில் கேட்டுக் கொண்டார்.

ஆனால் ஏற்கனவே உலக அணிகளுக்கு எடுத்துக்காட்டாகவும் சவாலாகவும் விளையாடி வரும் இந்தியா யாருக்கும் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி நியூசிலாந்து டி20 தொடருக்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை எனில் அவரைப் போன்றவர்கள் விமர்சிப்பது சகஜமாகும். அதை நாங்கள் மதிக்கிறோம். மேலும் ஒவ்வொருவரும் வித்தியாசமான கண்ணோட்டங்களைக் கொண்டிருப்பார்கள் என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் நாங்கள் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன்”

“ஏனெனில் ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் அனுபவங்களை பெற்று முன்னேறி வருகிறோம். பொதுவாக அனைவரும் எதிர்பார்த்த வெற்றி முடிவுகள் கிடைக்காத போது இது போன்ற விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதே சமயம் நாங்களும் இதுவரை செய்த தவறுகளை திருத்திக் கொள்வதில் இன்னும் நிறைய வேலைகளை செய்து கவனம் செலுத்த உள்ளோம். இந்த டி20 உலகக் கோப்பை எங்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் கிரிக்கெட் வீரர்களான நாங்கள் வெற்றிகளை கொண்டாடுவதை போலவே இந்த தோல்விகளையும் ஜீரணித்து முன்னோக்கி நடக்க வேண்டியது அவசியமாகும். மேலும் வருங்காலங்களில் இப்போது செய்த தவறுகளை நாங்கள் திருத்திக் கொண்டு சிறந்தவர்களாக மாற முயற்சிப்போம்”

“அடுத்த டி20 உலக கோப்பைக்கு இன்னும் 2 வருடங்கள் இருப்பதால் அதற்குள் இன்னும் நாங்கள் நிறைய புதிய திறமைகளை கண்டறிவோம். வரும் காலங்களில் நிறைய போட்டிகளில் விளையாடும் நாங்கள் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்போம். அதற்கான பாதை துவங்கியுள்ளது. இருப்பினும் அதற்கான நேரம் இன்னும் நிறைய உள்ளது. அத்துடன் வரும் காலம் நல்லபடியாக அமையும் என்ற நிலையில் தற்போதைய நிமிடங்களை மகிழ்ச்சியுடன் விளையாடுவதற்கு நாங்கள் முயற்சிக்க உள்ளோம்” என்று கூறினார்.

- Advertisement -