அவசரப்படாதீங்க இன்னும் முழுசா விலகல, நல்லதே நடக்கும் – பும்ரா பற்றி ரசிகர்களுக்கு கங்குலி தெம்பான செய்தி

Ganguly
- Advertisement -

விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் 2007க்குப்பின் கோப்பையை வெல்வதற்காக இந்தியா இறுதி கட்டமாக தயாராகி வருகிறது. ஆனால் இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியிலிருந்து நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வரும் அவர் இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார்.

அதிலும் டி20 கிரிக்கெட்டில் போட்டியின் அனைத்து நேரங்களிலும் குறிப்பாக கடைசி கட்ட ஓவர்களில் குறைவான ரன்களைக் கொடுத்து துல்லியமான யார்கர் பந்துகளால் விக்கெட்டுகளை எடுக்கும் திறமை பெற்றுள்ள அவர் வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக போற்றப்படுகிறார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் பந்துவீச்சு துறையின் முதுகெலும்பு வீரராக போற்றப்படும் அவர் கடைசி நேரத்தில் காயத்தால் விலகியுள்ளது இந்தியாவின் உலகக் கோப்பை கனவையும் தகர்த்துள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -

அவசரப் படாதீங்க:
ஏனெனில் வேகத்திற்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலிய மைதானங்களில் நடைபெறும் உலகக் கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள எஞ்சிய பவுலர்களான புவனேஸ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் வெறும் 130 கி.மீ வேகத்தில் வீசும் மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் கடைசிகட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக இருக்கின்றனர். அதனால் இம்முறை உலகக் கோப்பை கிடையாது என்று ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். முன்னதாக இது போன்ற நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த வருடம் அயர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற முக்கியமில்லாத தொடர்களில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டது.

இருப்பினும் சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயமடைந்த அவர் ஆசிய கோப்பையில் பங்கேற்காததால் இந்தியாவுக்கு தோல்வி கிடைத்தது. அந்த தோல்விக்குப் பின் குணமடைந்த அவர் உலக கோப்பைக்கு முன்பாக பார்முக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க தொடரில் சேர்க்கப்பட்டார். அதில் மொகாலி போட்டியில் ஓய்வெடுத்து எஞ்சிய 2 போட்டிகளில் விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிகளில் பங்காற்றிய அவர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் தென் ஆப்பிரிக்கா டி20 போட்டிக்கான வலைப்பயிற்சியில் காயமடைந்ததால் பங்கேற்கவில்லை.

- Advertisement -

அவரது காயம் சோதிக்கப்பட்டதில் முதுகுப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் உலக கோப்பை உட்பட அடுத்த 6 மாதங்களுக்கு பங்கேற்க முடியாது என்ற செய்திகள் வெளியானது. குறிப்பாக உலகக்கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவதற்கு முற்றிலும் வாய்ப்பில்லை என்று பிசிசிஐ அதிகாரி உறுதியாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் பும்ராவின் காயம் பற்றி யாரும் அவசரப்பட வேண்டாம் என்று தெரிவிக்கும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அவருடைய காயத்தை பற்றி முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் உலக கோப்பையில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இல்லை. இன்னும் ஜஸ்பிரித் பும்ரா உலக கோப்பையிலிருந்து வெளியேறவில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அவரது காயத்தை பற்றி அறிந்து கொள்ள நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு பயணிப்பாரா என்பது பற்றி எனக்கு தெரியாது. இதனுடைய முழு விவரத்தை அடுத்த 3 – 4 நாட்களில் கண்டறிவோம். இந்த விஷயத்தில் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இருப்பினும் இதுவரை அவர் காயத்தால் விலகவில்லை” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது பும்ரா காயத்தால் வெளியேறுகிறார் என்ற செய்திகள் வந்ததே தவிர இதுவரை பிசிசிஐ சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. மேலும் தென் ஆப்ரிக்க தொடரில் மட்டுமே அவருக்கு பதில் முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னும் உலக கோப்பையில் அவர் அதிகாரப்பூர்வமாக விலகி விட்டார் என்றும் அவருக்கான மாற்று வீரரும் அறிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: கடினமாக உழைத்து மீண்டும் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பேன் – தமிழக வீரர் உறுதியான நம்பிக்கை

அந்த நிலைமையில் அவரது காயத்தை பற்றி மருத்துவக்குழு சோதித்து வருவதால் இன்னும் சில நாட்களில் கிடைக்கும் இறுதி முடிவு நல்லதாகவே இருக்கும் என்று சௌரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒருவேளை லேசான காயமாக இருக்கும் பட்சத்தில் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்து அணியுடன் இணைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கங்குலி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

Advertisement