தோனி ரூமில் அமர்ந்திருந்தா ஜெயிக்க முடியுமா – 2015 முதல் உ.கோ தோல்விக்கான காரணத்தை விளக்கும் முன்னாள் வீரர்

Dhoni
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 4 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இது மட்டுமல்லாது ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் நடந்த தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரிலும் தோல்வியடையாமல் இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது. இதனால் இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா உலகக்கோப்பையை வெல்லுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

INDvsPAK

- Advertisement -

மேலும் கடந்த 2007க்குப்பின் இந்த உலக கோப்பையை தொட முடியாமல் தவிக்கும் கதைக்கும் 2013க்குப்பின் எந்த ஒரு ஐசிசி உலகக் கோப்பையையும் வெல்ல முடியாமல் தவிக்கும் கதைக்கும் இம்முறை இந்தியா முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடைசியாக கடந்த 2013இல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை எம்எஸ் தோனி தலைமையில் வென்ற இந்தியா அதன்பின் 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் 2015 உலகக் கோப்பை அரையிறுதியிலும் 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதியிலும் தோற்றது.

நாக்-அவுட் சொதப்பல்கள்:
தோனி ஏற்கனவே 3 உலகக் கோப்பையை வென்று கொடுத்து விட்டதால் அந்த தோல்விகள் பரவாயில்லை என்ற வகையில் 2017இல் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தலைமையில் வெல்லுமா என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா அந்த வருடம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் படுதோல்வியையும் 2019 உலகக் கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்திடமும் 2021 டி20 உலக கோப்பையில் மீண்டும் பாகிஸ்தானிடம் மண்ணைக் கவ்வியது.

Kohli

மொத்தத்தில் கடந்த 2014 முதல் நடைபெற்ற பெரும்பாலான ஐசிசி உலக கோப்பைகளிலும் லீக் சுற்றில் அசத்திய இந்தியா அழுத்தமான நாக்-அவுட் சுற்றில் சொதப்பி வெற்றியை தாரை வார்த்து வருகிறது. இத்தனைக்கும் தற்போதைய இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர் போல சாதாரண இருதரப்பு தொடர்களில் மிரட்டும் இந்தியா உலக கோப்பைகளில் தடுமாறுவது ரசிகர்களுக்கு வேதனையாகவும் குழப்பமாகவும் அமைந்து வருகிறது.

- Advertisement -

தவறான முடிவுகள்:
குறிப்பாக 2019 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர்கள் இருந்தும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற டாப் ஆர்டர் சொதப்பியதால் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை எம்எஸ் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முடிந்தளவுக்கு போராடிய போதிலும் காப்பாற்ற முடியவில்லை.

Kohli

ஆனால் அந்த போட்டியில் நங்கூரமாக நின்று பொறுமையாக விக்கெட்டை விடாமல் கடைசிவரை பேட்டிங் செய்த தோனி தினேஷ் கார்த்திக்க்கு முன்னதாக களமிறங்கியிருந்தால் முன்கூட்டியே செட்டிலாகி கடைசியில் சற்று அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றிருக்க முடியும் என்று நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கருதினார்கள். அது உண்மைதான் என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் பட்டேல் தோனி போன்ற அனுபவம் வாய்ந்தவரை கடைசியாக களமிறக்கலாம் என்ற அணி நிர்வாகத்தின் தவறான முடிவே அந்த தோல்விக்கு காரணமென்று தெரிவிக்கிறார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “2019 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நாம் தினேஷ் கார்த்திக்கை 5வது இடத்திலும் தோனியை 7வது இடத்திலும் பேட்டிங் செய்ய அனுப்பினோம். ஆனால் அணியின் உடைமாற்றும் அறையில் அமர்ந்துகொண்டு எம்எஸ் தோனியால் வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று நான் கருதவில்லை. அதுவே இருதரப்பு தொடர்களில் பெரிய அளவில் மாற்றங்களை செய்ய தேவையில்லை என்பதே இந்தியா எளிதாக வெல்வதற்கு காரணமாகும். ஆனால் அரையிறுதி அல்லது இறுதியில் நிலவும் அழுத்தம் முற்றிலும் வேறுபட்டது. 2015 உலக கோப்பையில் சிறந்த அணியிடம் (ஆஸ்திரேலியா) இந்தியா தோல்வியடைந்தது”

Parthiv

“ஆனால் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பேட்டிங்க்கு சாதகமான பிட்சில் டாஸ் வென்று பந்துவீச தீர்மானித்தது யுக்திகளின் அடிப்படையில் மொத்தமாக தவறானது. அல்லது 2019 உலக கோப்பையில் நாம் சிறந்த அணியை தேர்வு செய்யவில்லை. ஏனெனில் அந்த சமயத்தில் 2 வருடங்களாகியும் 4வது இடத்தில் பேட்டிங் செய்பவரை நம்மால் தீர்மானிக்க முடியவில்லை. கடந்த டி20 உலக கோப்பையில் முதன்மை சுழல்பந்து வீச்சாளரான சஹால் கழற்றி விடப்பட்டு அப்போது தருணத்தில் சிறந்து விளங்கியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்படி சரியான யுக்திகளை கையாளும் வரை ஐசிசி உலகக் கோப்பைகளை நம்மால் வெல்ல முடியாது” என்று கூறினார்.

அவர் கூறுவது போல 2017 சம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பேட்டிங்க்கு சாதகமான ஓவல் மைதானத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசி ரன்களை வாரி வழங்கி தோற்றது. 2021 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக சஹால் சற்று தடுமாறினார் என்பதற்காக வருண் சக்ரவர்த்தி மற்றும் ராகுல் சஹர் தேர்வு செய்யப்பட்டது தோல்வியை பரிசளித்தது.

Advertisement