ரொம்ப எதிர்பாக்காதீங்க.. தெ.ஆ மண்ணில் அவரால் சதம், இரட்டை சதமடிப்பது கஷ்டம்.. கம்பீர் அதிரடி கருத்து

Gautam Gambhir
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரில் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையின் இந்தியா சிறப்பாக விளையாடி தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று புதிய சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக வேகத்துக்கு சாதகமான மைதானங்களை கொண்ட தென்னாப்பிரிக்காவில் வெற்றி பெறுவதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது. அந்த சூழ்நிலையில் 2023 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர்கள் இத்தொடரில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

ரொம்ப எதிர்பாக்காதீங்க:
அதே போல கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் இத்தொடரில் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலங்களில் ஐபிஎல் முதல் சர்வதேசம் வரை தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் பெரும்பாலான போட்டிகளில் நன்றாக விளையாடிய அவர் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தியுள்ளார்.

அதனால் இத்தொடரில் குறைந்தபட்சம் அவர் ஒரு சதமடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் தரமான பவுலர்களை கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வேகத்துக்கு சாதகமான மைதானத்தில் ஜெய்ஸ்வால் சதம், இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்க வேண்டாம் என கௌதம் கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வெஸ்ட் இண்டீஸில் கிட்டத்தட்ட இந்திய துணை கண்டத்தைப் போன்ற மைதானங்கள் இருக்கும். ஆனால் இங்கே மிகவும் சவாலான பவுலிங் அட்டாக் மற்றும் சூழ்நிலைகள் இருக்கும். குறிப்பாக இங்கே மார்க்கோ யான்சன், ககிஸோ ரபாடா, லுங்கி நிகிடி அல்லது பர்கர் ஆகியோருக்கு எதிராக பவுன்ஸ் இருக்கக்கூடிய மைதானத்தில் நீங்கள் விளையாட வேண்டும். ஜெயிஸ்வாலிடம் முன்னங்கால் மற்றும் பின்னங்காலில் விளையாடும் திறமை இருக்கிறது”

“ஆனால் இங்கே சவால் வித்தியாசமாக இருக்கும். எனவே இம்முறை அவர் நல்ல அனுபவத்தை பெறுவார் என்று நம்புகிறேன். அதனால் இளம் வீரரான அவரிடம் முதல் போட்டியிலேயே சதம் அல்லது இரட்டை சதமடிப்பார் என்று நீங்கள் அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். ஒருவேளை அவர் சதம் அடிக்கலாம். ஆனால் 25 – 30 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தால் கூட ஜெய்ஸ்வால், கில் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் நாட்டுக்கு நல்ல வீரர்களாக முன்னேறி திரும்புவார்கள்” என்று கூறினார்.

Advertisement