இந்திய கிரிக்கெட் அணி தங்களதுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் இந்தத் தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ளது. அதனால் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக இருக்கிறோம் என்பதையும் இந்திய அணி காண்பித்துள்ளது.
இந்தத் தொடருக்கு முன்பாக சுமாரான ஃபார்மில் இருந்த ரோஹித் சர்மாவும் இரண்டாவது போட்டியில் சதத்தை அடித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. முன்னதாக இந்தத் தொடரில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்க்கு பதிலாக கே.எல். ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் கீப்பராக நன்றாக பேட்டிங் செய்த அவர் இதற்கு முன் மிடில் ஆடரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கம்பீரின் சோதனை:
ஆனால் இந்தத் தொடரில் அவரை 6வது இடத்தில் களமிறங்கியுள்ள பயிற்சியாளர் கௌதம் கம்பீர் 5வது இடத்தில் அக்சர் படேலை பேட்டிங் செய்ய வைத்து வருகிறார். அந்த வாய்ப்பில் முதல் போட்டியில் 52 ரன்கள் அடித்த அக்சர் 2வது போட்டியில் 41* ரன்கள் குவித்து கணிசமான விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியுள்ளார். மறுபுறம் 6வது இடத்தில் விளையாடிய ராகுல் 12 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளார்.
கடந்தக் காலங்களில் 5வது இடத்தில் நன்றாக விளையாடியுள்ள ராகுல் 6வது இடத்தில் பெரிதாக அசத்தியதில்லை. அதனால் அவரை கம்பீர் சரியாக பயன்படுத்தவில்லை என்று ராகுல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் ராகுல் போன்ற முழுமையான பேட்ஸ்மேனுக்கு பதில் அக்சர் படேலை 5வது இடத்தில் விளையாட வைக்கும் கௌதம் கம்பீரின் முடிவு மூளையற்றது என முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் விமர்சித்துள்ளார்.
கணேஷ் விமர்சனம்:
இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ராகுலுக்கு எதிராக மீண்டும் அக்சர் பட்டேல் விளையாடுவதைப் பார்த்து நான் வார்த்தைகள் இன்றி நிற்கிறேன். ராகுல் போன்ற முழுமையான பேட்ஸ்மேனை 6வது இடத்தில் தள்ளுவதில் ஏதேனும் விவேகம் இருக்கிறதா? இதுவே 5/3 என இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறும் போது சவாலான பிட்ச்சில் அக்சர் படேலை 5வது இடத்தில் விளையாட வைக்க உங்களுக்குத் தைரியம் இருக்குமா?”
இதையும் படிங்க: 10க்கு 9.. இந்தியாவின் மோசமான உலக சாதனையை வாங்கிக்கொண்ட இங்கிலாந்து.. 1982 முதல் தொடரும் பரிதாபம்
“இல்லையென்றால் இந்த சோதனையில் என்ன விவேகம் இருக்கிறது? இது முற்றிலும் மூளையற்றது” எனக் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன்பாக கௌதம் கம்பீர் சில சோதனைகளை செய்துப் பார்த்து வருகிறார். இந்த சோதனைகளால் இந்தியா வெற்றி பெறும் வரை ரசிகர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால் மிகையாகாது.



